கர்நாடகாவில் ஓங்கும் காங்கிரஸ் கை! கட்சி தாவிய 15 தலைவர்கள்! அதிர்ச்சியில் பாஜக, ஜேடிஎஸ்!
கர்நாடகாவில் பாஜக மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் பெங்களூருவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தனர்.
அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஜேடி(எஸ்) கட்சிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், இரு கட்சிகளைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் வெள்ளிக்கிழமை காங்கிரஸில் இணைந்தனர். பெங்களூருவில் துணை முதல்வர் டி.கே.சிவகுமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், எல்.ஸ்ரீனிவாஸ், அஞ்சனப்பா, எச்.சுரேஷ், வெங்கடசுவாமி நாயுடு, நாராயணா, ராமு, பாலண்ணா, கபடி பாபு மற்றும் எம்.நாகராஜ் ஆகியோர் காங்கிரஸில் இணைந்தனர்.
இந்த விழா பெங்களூருவில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருக்கும் பாரத் ஜோடோ அரங்கத்தில் நடைபெற்றது. அவர்களுக்கு டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கொடிகளை கொடுத்து கட்சிக்கு வரவேற்றார். ஏற்கெனவே, பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் மற்றும் ஆர்ஆர் நகர் தொகுதிகளில் பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் காங்கிரஸில் இணைந்திருத்தனர். இப்போது மூன்றாவது முறையாக பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வந்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய டி.கே.சிவக்குமார் பாஜகவை கடுமையாக சாடினார். "பெங்களூரு மாநகராட்சியில் ஆட்சியைக் கைப்பற்ற பெரும் சக்தியாக செயல்பட்ட பத்மநாபநகர் தொகுதியைச் சேர்ந்த பாஜக மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் இப்போது காங்கிரஸுடன் உள்ளனர். பாஜக தலைவர்கள் அவர்களை சரியாக நடத்தவில்லை" என்று சிவக்குமார் கூறினார்.
பள்ளி மாணவர்கள் அரசியல் சாசன முகவுரையை வாசிப்பது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
2024 மக்களவைத் தேர்தலில் கர்நாடக காங்கிரஸ் 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என சிவக்குமார் உறுதி கூறினார். கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா மற்றும் மத்திய பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை பாஜக கவிழ்த்தது என்றும் சிவகுமார் குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்படும் என்று நம்பிக்கை தெரிவித்த டிகே சிவக்குமார், "சட்டசபைத் தேர்தல் முடிவுகளில் நான் உறுதியாக இருந்தேன், இப்போது சொல்கிறேன், மக்களவை மற்றும் பிபிஎம்பி தேர்தல்களில் நாங்கள் இன்னும் பல இடங்களை வெல்வோம்" என்று சிவக்குமார் கூறினார்.
பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கூட்டணி பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய சிவக்குமார், கர்நாடகாவில் பாஜகவின் நிலை மோசமாக இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு துரோகம் செய்தவர்களுடன் கைகோர்ப்பதாகவும் கூறினார். “ஒருவருக்கொருவர் துரோகம் செய்தவர்கள் தங்களுக்குள் சமரச அரசியல் செய்கிறார்கள்” என்று சிவக்குமார் விமர்சித்தார்.
குட்பை சொன்ன எஸ்.கே.மிஸ்ரா... அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமனம்