Set up urine banks produce urea Nitin Gadkari
ஒவ்வொரு தாலுக்காவிலும் ஒரு சிறுநீர் வங்கி உருவாக்கப்படும். அதன் மூலம் உரம் தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் இருந்து யூரியா இறக்குமதி செய்வதை தவிர்க்கலாம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி புதிய யோசனை தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-
மனிதர்களின் சிறுநீரை சேமித்து வைக்கும் சிறுநீர் வங்கி, தாலுக்கா தோறும் உருவாக்கும் எனது திட்டம் முதல்கட்டமாகவே இருக்கிறது. இது குறித்து சுவிட்சர்லாந்து ஆய்வாளர்களுடன் கலந்து பேசி, நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி நடந்து வருகிறது.
மனிதர்களின் சிறுநீரில் ஏராளமான நைட்ரஜன் சத்து நிறைந்துள்ளது. ஆனால், இது முழுமையாக வீணடிக்கப்படுகிறது. வீணாகும் பொருளை சத்தானதாக மாற்றுவதே எனது நோக்கமாகும்.இந்த முயற்சியில் யாருக்கும் எந்த பாதகமும் ஏற்படாது. பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கு மாற்றாக உயிர் உரங்கள் ஏற்கனவே இருக்கின்றன. இதில் இயற்கையாகக் கிடைக்கும் நைட்ரஜனையும் சேர்க்கும் போது பயிர்களுக்கு மிகுந்த ஊட்டமாக அமையும்.
ஒரு விவசாயி நாள் ஒன்றுக்கு 10 லிட்டர் சிறுநீர் வரை கேனில் ேசகரித்து சிறுநீர் வங்கிக்கு கொண்டு வந்து கொடுப்பார் என எதிர்பார்க்கிறேன். இந்த சிறுநீர் லிட்டர் ஒரு ரூபாய்க்கு எடுத்துக்கொள்ளப்படும். இந்த திட்டத்தை முதலில் கிராமங்களில்தான் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். சிறுநீரோடு தண்ணீர் கலக்காமல் இருந்தால், தரமான உரத்தை எடுக்க முடியும்.
இந்த திட்டத்துக்கான அனைத்து விதமான பொருளாதார ரீதியான விஷயங்களையும் சேகரித்துள்ளேன். இதற்காக தேசிய சூழல் ஆய்வு மையத்தின் உதவியையும் நாடி இருக்கிறேன்.அவர்கள் எனது திட்டத்தை செயலாக்கம் செய்வார்கள்.
இந்த திட்டத்தை முதன் முதலில் நாக்பூரில் உள்ள எனது தேபேவாடா கிராமத்தில் செய்ய இருக்கிறேன். அங்கு சரியாகச் செயல்படுத்தி வெற்றி கிடைக்கும் பட்சத்தில் தாலுகா வாரியாக தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் யோசனை செயல்படுத்தக்கூடியது என்று தேசிய சூழல் பொறியியல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் தபான் சக்கரவர்த்தி தெரிவித்தார். அவர் கூறுகையில், “நிதின் கட்கரியின் சிறுநீர் வங்கி என்பது சிறப்பான திட்டம். செயல்படுத்தக்கூடிய ஒன்றாகும்.இந்த திட்டம் ஏற்கனவே 4-வது ஐந்தாண்டு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.
