மலையாள நடிகை கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான வழக்கில் நடிகர் திலீப்பின் காவலை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை கொச்சி அங்கமாலி நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, கேரளம், எர்ணாகுளம் அருகே படப்பிடிப்பு முடிந்து மலையாள நடிகை காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வழியில் காரை மறித்து, அதில் ஏறிய 3 பேர், நடிகைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளனர். இதையடுத்து, நடிகை, காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவரின் இந்த புகாரை அடுத்து, கார் ஓட்டுநர் மார்ட்டின், பிரதீப், பல்சர் சுனில் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பிருப்பதை அறிந்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் திலீப் கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் திலீப், ஜாமீன்கோரி, கொச்சி அங்கமாலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், நடிகர் திலீப்பின் ஜாமீன் மனுவை, நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதனையடுத்து, கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்தார் நடிகர் திலீப். இதனை உயர்நீதிமன்றமும் தள்ளுபடி செய்து விட்டது.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள திலீப், கொச்சி, அங்கமாலி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரின் காவலை ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.