மத்தியப் பிரதேசத்தில், உயரதிகாரி ஒருவரின் வளர்ப்பு நாய் காணாமல் போனதால், அவர் கான்ஸ்டபிள் ஒருவரைத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிளுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. இன்ஸ்பெக்டர் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், உயரதிகாரியின் வளர்ப்பு நாய் காணாமல் போனதால், அந்த அதிகாரி ஒரு கான்ஸ்டபிளை கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

ரிசர்வ் இன்ஸ்பெக்டர் (RI) சௌரப் சிங் குஷ்வாஹா என்பவரின் அரசு இல்லத்தில் ஆகஸ்ட் 23 அன்று இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நள்ளிரவில் அழைத்து தொல்லை

அந்த அதிகாரியின் வீட்டில் பணியில் இருந்த கான்ஸ்டபிள் ராகுல் சவுகான், நள்ளிரவு 1:30 மணியளவில் குஷ்வாஹாவால் அழைக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தன்னுடைய நாய் காணாமல் போனதற்கு ராகுல் சவுகான்தான் காரணம் என்று கூறி, குஷ்வாஹா தனது பெல்ட் மற்றும் செருப்பால் அவரை கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலில் கான்ஸ்டபிள் ராகுலுக்கு கை, கால்கள் மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. வாது.

சாதி வன்முறை குற்றச்சாட்டு

குஷ்வாஹாவும் அவரது மனைவியும் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், தன்னை உடல்ரீதியாகத் தாக்கியதாகவும் ராகுல் சவுகான் குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். ராகுல் சவுகானின் மனைவி, குஷ்வாஹாவின் அடாவடி செயல்களைக் கண்டித்து, நியாயம் கிடைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

இதற்கிடையில், ராகுல் சவுகானின் குற்றச்சாட்டுகளை குஷ்வாஹா மறுத்தார். தான் வீட்டிற்கு வந்தபோது, வீடெல்லாம் சிகரெட் துண்டுகள் மற்றும் மது பாட்டில்கள் சிதறி கிடந்ததாக அவர் கூறினார். மேலும், ராகுல் சவுகான் குடித்துவிட்டு, நாயை தாக்கிவிட்டு வெளியே விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

நடவடிக்கை என்ன?

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, உயரதிகாரி குஷ்வாஹா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜெய் ஆதிவாசி யுவ சக்தி (JAYS) உள்ளிட்ட பழங்குடியினர் அமைப்புகள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர், குஷ்வாஹா மீது எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் (SC/ST Act) கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.