பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. ஒன்பது இடங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன, மேலும் இந்தியா பல நாடுகளுக்கு நடவடிக்கை குறித்து விளக்கமளித்துள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நிலைகளைக் குறிவைத்து இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க இந்தியாவின் மூத்த அதிகாரிகள் பல நாடுகளில் உள்ள தங்கள் சகாக்களுடன் பேசியுள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் இந்திய அதிகாரிகள் பேசி விளக்கம் அளித்துள்ளனர் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் தாக்குதல் எதற்காக?

முன்னதாக, நள்ளிரவுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத நிலைகளைத் தாக்கி, 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியதாகக் என்று அறிவிக்கப்பட்டது. தாக்கப்பட்ட இடங்களில் இருந்துதான் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

மொத்தத்தில், ஒன்பது தளங்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் ராணுவத்தின் எந்த நிலைகளும் குறிவைக்கப்படவில்லை எனவும் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா நிதானமாக நடந்துகொண்டிருக்கிறது எனவும் பாதுகாப்புத்துறையின் அறிக்கை கூறுகிறது.

ஆபரேஷன் சிந்தூர்: குறிவைக்கப்பட்ட ஒன்பது இடங்கள் எவை?

இந்த நடவடிக்கையின் கீழ், பஹாவல்பூர், முரிட்கே, குல்பூர், பீம்பர், சக் அம்ரு, பாக், கோட்லி, சியால்கோட் மற்றும் முசாபராபாத் ஆகிய ஒன்பது இடங்களை இந்தியா குறிவைத்தது.

சென்ற ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து அரசாங்கம் இன்று பிற்பகலில் விரிவான விளக்கத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.