இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளது. சர்வதேச விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன, விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இந்திய விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து இந்தியா நடத்தியுள்ள ஆபரேஷன் சிந்தூர் ஏவுகணைத் தாக்குதல்லகளைத் தொடர்ந்து, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளது. அனைத்து சர்வதேச விமானங்களையும் நிறுத்தி வைத்துள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, நாட்டின் வான்வெளியை 48 மணி நேரம் மூடுவதாக அறிவித்துள்ளது.

விமான நிலையங்கள் மூடல்:

இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான நடவடிக்கைகள் காலவரையின்றி நிறுத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் லாகூர் விமான நிலையமும் அனைத்து வெளிச்செல்லும் விமானங்களையும் நிறுத்தியுள்ளது. கத்தார், துபாய், பஹ்ரைன், குவைத் மற்றும் ரியாத் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஹாவல்பூர், கோட்லி மற்றும் முசாபராபாத்தில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது என ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறியுள்ளார். இந்தியாவின் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அவர், இதற்காக இந்தியா தக்க பதிலடியை எதிர்கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா விமானங்களும் முடங்கின:

இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானில் விதிக்கப்பட்டுள்ள வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீநகர், ஜம்முர அமிர்தசரஸ் செல்லும் இண்டிகோ விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

"பிராந்தியத்தில் மாறிவரும் வான்வெளி நிலைமைகள் காரணமாக, ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர் மற்றும் தர்மசாலாவிற்குச் செல்லும் மற்றும் புறப்படும் எங்கள் விமானங்கள் பாதிக்கப்பட்டுள்ளன" என்று இண்டிகோ எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளது.

மற்றொரு பதிவில், "தற்போதைய வான்வெளி கட்டுப்பாடுகளால் பிகானேருக்குச் செல்லும்/வெளியேறும் விமானங்களும் பாதிக்கப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளது.