இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டம்: ரூ.1000 கோடி முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்!
இந்தியாவின் செமிகண்டக்டர் திட்டத்தின் ஒருபகுதியாக அமெரிக்க நிறுவனம் ரூ.1000 கோடி முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகளவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா அந்தத்துறையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்ப்பதுடன், உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்புக்கான கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
செமிகண்டக்டர் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் நிறுவனத்துடன், குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ரூ.22,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. செமிகண்டக்டர் துறையில் முன்னணி நிறுவனமான ஏஎம்டி சுமார் 400 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக, குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் செமிகான் இந்தியா 2023 மாநாட்டில் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த சிலிக்கான் பவர் கார்ப்பரேஷன் நிறுவனம், ஒடிசாவில் 150 மிமீ சிலிக்கான் கார்பைடு உற்பத்தி ஆலையை நிறுவ ரூ.1,000 கோடி முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்குழுமத்தின் இந்திய துணை நிறுவனமான RiR பவர் எலக்ட்ரானிக்ஸ் மூலம் இந்த முதலீடு செய்யப்படும் என அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி: பிரதமர் மோடி!
அமெரிக்கா சென்றுள்ள ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் குழு, அந்நிறுவனத்தின் ஹர்ஷத் மேத்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாநிலத்தின் தொழில்துறை சுற்றுச்சூழல் குறித்து அவர்கள் விவரித்ததாக தெரிகிறது. மேலும், ஒடிசா மாநில அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் கொள்கை உட்பட பல்வேறு வகைகளின் கீழ் கிடைக்கும் சலுகைகள் பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக, சிலிக்கான் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஒடிசா மாநில முதலீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான விருப்பக் கடிதம் (letter of intent) அமெரிக்கா சென்றுள்ள ஒடிசா மாநில அரசு அதிகாரிகள் குழுவிடம் அந்நிறுவனம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செமிகண்டக்டர்/எலக்ட்ரானிக் சிப் தயாரிப்பில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு வசதியாக ஒடிசா செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் கொள்கைக்கு அம்மாநில அமைச்சரவை கடந்த 21ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. சிலிக்கான் பவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் ஆலை அமையும் பட்சத்தில், ஒடிசாவில் முதன்முறையாக உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக அது அமையும். ஹர்ஷத் மேத்தா தலைமையிலான குழுவினர் இன்னும் ஒரு மாதத்திற்கும் ஒடிசா வரவுள்ளனர். அடுத்த 18 முதல் 24 மாதங்களில் செயல்பாட்டைத் தொடங்க அந்நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும் இதுகுறித்த விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலிக்கான் பவர் கார்ப்பரேஷன் 1994ஆம் ஆண்டு ஹர்ஷத் மேத்தாவால் தொடங்கப்பட்டது. செமிகண்டக்டர் வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் சோதனை ஆகியவற்றில் முன்னணி நிறுவனமாக சிலிக்கான் பவர் கார்ப்பரேஷன் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.