செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி: பிரதமர் மோடி!
செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
செமிகண்டக்டர் துறையை மையமாக கொண்ட செமிகான் இந்தியா மாநாடு 2023 (Semicon India 2023) குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெறுகிறது. ஜூலை 30ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். மைக்ரான், ஃபாக்ஸ்கான், ஏஎம்டி, ஐபிஎம், மார்வெல், வேதாந்தா, எல்ஏஎம் ஆராய்ச்சி, என்எக்ஸ்பி செமிகண்டக்டர்கள், கிராண்ட்வுட் டெக்னாலஜிஸ், இன்ஃபினியன் டெக்னாலஜிஸ், எஸ்டி மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், அப்ளைடு மெட்டீரியல்ஸ் உட்பட பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளன.
பிரதமர் மோடி தனது ராஜஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத் சென்றுள்ளார். ராஜ்கோட் அருகே கிரீன்ஃபீல்ட் சர்வதேச விமான நிலையம் மற்றும் வளர்ச்சித்திட்டங்களை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, செமிகான் இந்தியா மாநாடு 2023-யை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 'செமிகான் இந்தியா 2023' என்பது செமிகண்டக்டர் துறையில் கவனம் செலுத்தும் தேசிய அளவிலான நிகழ்வாகும். இந்தத் திட்டம் இந்திய செமிகண்டக்டர் துறை மற்றும் அதில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செமிகண்டக்டர் சிப், டிஸ்ப்ளே ஃபேப், சிப் டிசைன் மற்றும் அசெம்பிளிங் ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் இந்தியாவில் வளர்ந்து வரும் வாய்ப்புகள் குறித்த தங்கள் உள்ளீடு மற்றும் பகுப்பாய்வுகளை வழங்குவதற்கான ஒரு தளமாகவும் இந்த மாநாடு இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு இந்தியா 50 சதவீதம் நிதியுதவி அளிக்கும் என்றார். “மென்பொருளை புதுப்பிப்பது எப்படி அவசியமோ அதுபோன்றது இந்த நிகழ்வு. செமிகான் இந்தியா மூலம், தொழில்துறை, வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடனான உறவுகள் புதுப்பித்துக் கொள்ளப்படுகின்றன. நம்முடைய உறவுகளுக்கு இது முக்கியமானது என நான் கருதுகிறேன்.” என்று பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், “இன்று, உலகம் தொழில்துறை 4.0 க்கு சாட்சியாக மாறி வருகிறது. உலகம் எந்த ஒரு தொழில் புரட்சியை சந்தித்தாலும், அதன் அடித்தளம் எந்தவொரு பகுதி மக்களின் அபிலாஷைகளாக இருந்து வருகிறது. இதுவே முந்தைய தொழிற்புரட்சிகளுக்கும் அமெரிக்க கனவுக்கும் உள்ள தொடர்பு. இன்று அதே உறவுகளை நான்காவது தொழில் புரட்சிக்கும் இந்திய அபிலாஷைகளுக்கும் இடையே என்னால் பார்க்க முடிகிறது.” என்றார்.
இந்தியாவின் செமிகண்டக்டர் துறை பின் தங்க முந்தைய அரசுகளே காரணம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
பெங்களுருவில் செமிகான் இந்தியாவின் முதல் நிகழ்வைப் பற்றிப் பேசிய பிரதமர், “கடந்த ஆண்டு, செமிகான் இந்தியாவின் முதல் பதிப்பில் நாங்கள் அனைவரும் பங்கேற்றோம். அப்போது, இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் ஏன் முதலீடு செய்ய வேண்டும் என விவாதிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு கழித்து இன்று நிலைமை மாறிவிட்டது. இந்தியாவில் செமிகண்டக்டர் துறையில் ஏன் முதலீடு செய்யக்கூடாது? என அக்கேள்வி மாறிவிட்டது. கேள்வி மட்டும் மாறவில்லை; காற்றின் திசையும் இந்தியாவை நோக்கி மாறிவிட்டது. அதற்கான சாத்தியக்கூறுகள் இங்குள்ளன. இந்த மாற்றம் உங்களாலும் உங்கள் முயற்சியாலும் கொண்டு வரப்பட்டது. உங்கள் எதிர்காலத்தை இந்தியாவின் அபிலாஷைகளுடன் இணைத்துள்ளீர்கள். உங்கள் கனவுகளை இந்தியாவின் திறனுடன் இணைத்துள்ளீர்கள், இந்தியா யாரையும் ஏமாற்றாது.” என்றார்.
முன்னதாக, செமிகண்டக்டர்களின் விரிவான உற்பத்தி செயல்முறையை காட்சிப்படுத்தும் ஆறு நாட்கள் கண்காட்சியை இந்த வார தொடக்கத்தில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் துவக்கி வைத்தார். அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரான் நிறுவனம், குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் ஆலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அசெம்பிளி, டெஸ்டிங், மார்க்கிங் மற்றும் பேக்கேஜிங் ஆலையை அமைக்க ரூ.22,500 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குஜராத் மாநிலமும், மைக்ரான் நிறுவனமும் கையெழுத்திட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் சமீபத்திய பயணத்தின் போது, இந்தியாவில் மைக்ரான் நிறுவனத்தின் அதிநவீன செமிகண்டக்டர் வசதியை நிறுவுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.