இந்தியாவின் செமிகண்டக்டர் துறை பின் தங்க முந்தைய அரசுகளே காரணம்: மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!
இந்தியாவின் செமிகண்டக்டர் துறை பின் தங்க முந்தைய அரசுகளே காரணம் என மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
உலகளவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், இந்தியா அந்தத்துறையின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. செமிகண்டக்டர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டை ஈர்ப்பதுடன், செமிகண்டக்டர் தயாரிப்பிலும் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியா தனது பயன்பாட்டுக்கான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துவந்த நிலையில், தற்போது உள்நாட்டிலேயே செமிகண்டக்டர் தயாரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தியாவின் சொந்த செமிகண்டக்டர் பயன்பாடு 2026ஆம் ஆண்டில் 80 பில்லியன் டாலரையும், 2030ஆம் ஆண்டில் 110 பில்லியன் டாலரையும் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், செமிகண்டக்டர் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் நோக்கில், வெளிநாட்டு நிறுவனங்களிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், செமிகண்டக்டர் துறையை மையமாக கொண்ட செமிகான் இந்தியா மாநாடு 2023ஐ (Semicon India 2023) பிரதமர் மோடி குஜராத் மாநிலம் காந்தி நகரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த மாநாட்டில் முதலீட்டாளர்கள் உள்பட அத்துறையை சார்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். செமிகண்டக்டர் துறையில் முன்னணி நிறுவனமான ஏஎம்டி சுமார் 400 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாக இந்த மாநாட்டில் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றுள்ளார். “உலகத்தரம் வாய்ந்த செமிகண்டக்டர் வடிவமைப்பு மற்றும் புதுமை சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் இது நிச்சயமாக முக்கிய பங்கு வகிக்கும். திறமையான செமிகண்டக்டர் பொறியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கொண்ட எங்கள் பெரிய குழுவிற்கு மகத்தான வாய்ப்புகளை இது வழங்கும். செமிகண்டக்டர் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய மையமாக மாற வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு இந்த அறிவிப்பு ஊக்கமளிக்கும்.” என ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கையிலும், நாட்டில் மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ராஜீவ் சந்திரசேகர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
முன்னதாக இந்த மாநாட்டையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இந்தியாவின் செமிகண்டக்டர் துறை பின் தங்க முந்தைய அரசுகளே காரணம் என குற்றம் சாட்டினார். முந்தைய அரசாங்கங்கள் வெளிப்படுத்திய அரசியல் பார்வை மற்றும் திட்டமிடலில் தெளிவின்மை காரணமாக இந்தியாவின் குறைக்கடத்தி தொழில் பின்தங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் மின்னணு சுற்றுச்சூழலுக்கு புத்துயிர் அளிப்பதில் தற்போதைய அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், செமிகண்டக்டர் துறையில் இந்தியாவிடம் இருக்கும் மகத்தான ஆற்றலையும், அதைப் பயன்படுத்துவதில் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு குறித்தும் அவர் விளக்கினார்.
எலக்ட்ரானிக்ஸ், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், தொழில்நுட்பத்தால் இயங்கும் இன்றைய உலகில் செமிகண்டக்டர் வகிக்கும் முக்கிய பங்கு குறித்தும் அப்போது அமைச்சர் எடுத்துரைத்தார். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் கீழ், உலகளாவிய மின்னணுவியல் மற்றும் செமிகண்டக்டர் விநியோகச் சங்கிலியில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க பரிணாம வளர்ச்சியை அடையும் என்றும் அவர் கூறினார். உலகநாடுகள் செமிகண்டக்டர் தயாரிப்புக்கு ஏற்ற நாடாக இந்தியாவை பார்க்க ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியா செமிகண்டக்டர் தயாரிப்பில் அடுத்த 10 ஆண்டுகளில் முக்கிய நாடாகமாறும் என்று தெரிவித்த அவர், “செமிகண்டக்டர் துறையை ஊக்குவிக்க மத்திய அரசு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் 10 பில்லியன் டாலர் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த பத்து ஆண்டுகளில் செமிகண்டக்டர் துறையில் இந்தியாவை முக்கிய நாடாக மாற்றும். இதன் மூலம், சீனா செமிகண்டக்டர் துறையில் 25 ஆண்டுகளில் சாதிக்காததை இந்தியா 10 ஆண்டுகளில் சாதிக்கும்.” என்றார்.