Semicon India 2023 பிரதமர் மோடி துவக்கி வைப்பு; செமிகண்டக்டர் துறையில் ஏஎம்டி 400 மில்லியன் டாலர் முதலீடு!!
குஜராத்தில் இருக்கும் காந்திநகர், மகாத்மா மந்திரில் செமிகான் இந்தியா 2023 கூட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார்.

செமிகான் இந்தியா 2023 கூட்டம் இன்று குஜராத் மாநிலத்தில் துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி இந்தியாவின் வளர்ச்சி, பொருளாதாரம் குறித்துப் பேசினார். இந்தக் கூட்டம் மூன்று நாட்கள் காந்திநகரில் நடக்கிறது. இந்தியாவின் புதிய சிப் தொழில்நுட்பம் குறித்து தொழில்துறை தலைவர்களும் பேசினர். இந்தக் கூட்டத்தில் உலக நாடுகளில் இருந்து 50 பேரும், 100 ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கலந்து கொண்டுள்ளன. செமிகண்டக்டர் துறையில் இந்தியாவில் கொட்டி கிடக்கும் வாய்ப்புகள் குறித்து பேசப்பட்டது.
கூட்டத்தில் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "செமிகண்டக்டர் தொழில் என்பது அடித்தளத் தொழில் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது எஃகு மற்றும் ரசாயனத் தொழில்களைப் போன்றது. உங்களிடம் இந்த இரண்டு தொழில்களும் இருந்தால், அவை தொடர்பான பல தொழில்களில் நீங்கள் உற்பத்தி செய்யலாம். பிரதமரின் அமெரிக்க பயணத்தின் போது மூன்று முக்கிய செமிகண்டக்டர் துறை தொடர்பாக கையெழுத்தானது. மைக்ரானின் குறைக்கடத்தி ஆலைக்கான நில மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன, கட்டுமானம் விரைவில் தொடங்கும்'' என்றார்.
Bank Holiday In August 2023 : ஆகஸ்ட் மாதம் 14 நாட்கள் வங்கி விடுமுறை... முழு விபரம் இதோ !!
இவரைத் தொடர்ந்து பேசிய மார்க் பேப்பர்மாஸ்டர், ''ஏஎம்டி சுமார் 400 மில்லியன் டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம் 300 கூடுதல் பொறியாளர்களைச் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏஎம்டி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 400 மில்லியன் டாலர் முதலீடு செய்யும். பெங்களூரில் தனது மிகப்பெரிய ஆர் அண்டு டி மையத்தை அமைக்கும். இந்த ஆண்டு முடிவதற்குள் திறக்கப்படும். 2028-இறுதிக்குள் 300 கூடுதல் பொறியாளர்கள் பணியில் சேர்க்கப்படுவார்கள்'' என்றார்.
''முதன்முறையாக, புவிசார் அரசியல், உள்நாட்டுக் கொள்கைகள் மற்றும் தனியார் துறை திறன் ஆகியவை செமிகண்டக்டர் உற்பத்தியை மேற்கொள்ள இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. தற்போதைய செமிகண்டக்டர் தொழில்துறை 1 டிரில்லியன் டாலர் தொழில்துறையாக வளர வாய்ப்புள்ளது. ஆசியாவிலேயே செமிகண்டக்டர்களில் அடுத்த அவலுவான மையமாக இந்தியா இருக்கும்'' என்று செமிகான் இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அஜித் மனோச்சா தெரிவித்துள்ளார்.
செமிகான் இந்தியாவின் அப்ளைடு மெட்டீரியல்ஸ் செமிகண்டக்டர் தயாரிப்பு குழுமத் தலைவர் பிரபு ராஜா பேசுகையில், ''உற்பத்தியை மேம்படுத்த பிரதமர் மோடியின் வலுவான திட்டத்துடன், உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க தயாராக உள்ளது. எந்தவொரு நிறுவனமும் அல்லது நாடும் இந்தத் துறையில் மட்டும் சவால்களை சமாளிக்க முடியாது. இந்தத் துறையில் கூட்டாண்மை தேவைப்படும். இந்தியாவுடன் அமெரிக்கா இதில் கைகோர்த்து இருக்கிறது'' என்றார்.
இந்தியாவை செமிகண்டக்டர்களுக்கான உலகளாவிய மையமாக மாற்றும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு நன்றி என்று மைக்ரான் டெக்னாலஜி, செமிகண்டக்டர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் மெஹ்ரோத்ரா தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், ''குஜராத்தில் செமிகண்டக்டர் கூட்டம் மற்றும் சோதனை வசதியை உருவாக்க மைக்ரான் உறுதிபூண்டுள்ளது. குஜராத்தில் எங்கள் திட்டம் கிட்டத்தட்ட 5000 நேரடி வேலைகளையும், சமுதாயத்தில் கூடுதலாக 15,000 வேலைகளையும் உருவாக்கும் என்று மதிப்பிட்டுள்ளோம். இந்தத் துறையில் மற்ற முதலீடுகளை ஊக்குவிக்க இந்த முதலீடு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா ஆகியவை உண்மையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை நாட்டில் ஏற்படுத்துகிறது'' என்றார்.
''பிரதமர் மோடி, இந்தியா மற்றும் தைவானுக்கான தொழில்நுட்ப நிலைப்பாடு குறித்து குறிப்பிட்டு இருந்தார். தைவான் இந்தியாவின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும் என்று செமிகான் இந்தியாவின் ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியு தெரிவித்தார்.