சேகர் ரெட்டிக்கு உதவிய கொல்கொத்தா கூட்டாளி பரஸ்மல் லோத்தாவை சென்னைக்கு விசாரணைக்கு அழைத்து வருகிறது அமலாக்கத்துறை. இதன் மூலம் மேலும் பல மர்மங்கள் விலகும், சேகர் ரெட்டியுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

 கடந்த 8ம் தேதி சேகர் ரெட்டியின் வீடு உள்ளிட்ட அவரது அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் 147 கோடி பழைய ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளும், 33 கோடி புதிய 2000 ரூபாய் நோட்டுகளும், 178 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டன. 

கணக்கில் வராத கோடிக்கணக்கான கருப்பு பணத்தை வைத்திருந்த சேகர் ரெட்டிக்கு பணம் மாற்ற உதவியது யார் என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய  விசாரணையில்  கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மல் லோதா சிக்கினார். 

 ரூ.25 கோடிக்கு பழைய ரூபாயை புதிய நோட்டுகளாக மாற்ற உதவிசெய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரது நண்பரை சிபிஐ அதிகாரிகள்  கைது செய்தனர். 

சேகர் ரெட்டிக்கு ரூ.25 கோடி பழைய நோட்டுகளை புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுத்ததாக  தொழிலதிபர் பரஸ்மல் லோதாவை  அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல் ரோஹித் டாண்டானுக்கும் தொழிலதிபர் பர்ஸமல் லோதா பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்றித் தந்துள்ளார். டெல்லியை சேர்ந்த வழக்கறிஞரான ரோஹித் டாண்டான் ரூ.13 கோடி மாற்றிய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் லோத்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சேகர் ரெட்டி வழக்கில் கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மல் லோதாவை சென்னை அழைத்து வந்து விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. பரஸ்மல் லோதாவை கைது செய்ய பிடிவாரண்ட் கோரி சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. 

சேகர் ரெட்டிக்கு பழைய நோட்டுகளை புதிய நோட்டுகளாக மாற்ற தொழிலதிபர் பரஸ்மல் லோதா உதவியதால் அவரை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.