- Home
- இந்தியா
- DJ சத்தத்தால் 140 கோழிகள் துடிதுடித்து பலி.. கோழிகளுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா? அதிர்ச்சியூட்டும் பின்னணி!
DJ சத்தத்தால் 140 கோழிகள் துடிதுடித்து பலி.. கோழிகளுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா? அதிர்ச்சியூட்டும் பின்னணி!
உத்தரபிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் DJ சத்தத்தை தாங்க முடியாமல் 140 கோழிகள் துடிதுடித்து பலியாயின. இதற்கு என்ன காரணம்? கோழிகளுக்கும் ஹார்ட் அட்டாக் வருமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிஜே சத்தத்தால் 140 கோழிகள் பலி
இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து விட்டோம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதே நிலைமை தான். ஆனால், இந்த டிஜே-க்களால் வரும் சவுண்ட் தொல்லை ரொம்பவே அதிகம். வயதானவர்கள், சின்னக் குழந்தைகளுக்கு இந்த அதிக சத்தம் பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
திருமண ஊர்வலத்தில் டிஜே சத்தம்
இந்த பயங்கர சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் ஆபத்து என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. அந்த மாநிலத்தின் சுல்தான்பூரில் விசித்திரமான சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது ஒரு திருமண ஊர்வலத்தில் அதிக சத்தத்துடன் டிஜே இசைத்ததால், அருகிலிருந்த கோழிப் பண்ணையில் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. டிஜே சத்தம் தாங்க முடியாமல் ஒன்று, இரண்டு அல்ல, 140 கோழிகள் இந்த சம்பவத்தில் இறந்துள்ளன.
மாரடைப்பால் கோழிகள் இறந்தன
மாரடைப்புதான் கோழிகளின் மரணத்திற்குக் காரணம் என பிரேதப் பரிசோதனை அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கை வந்தவுடன், டிஜே ஆப்பரேட்டர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஏப்ரல் 25 அன்று சுல்தான்பூரில் உள்ள தரியாபூர் கிராமத்தில்தான் இந்த டிஜே நிகழ்ச்சி நடந்துள்ளது. குட்வார் பகுதியில் உள்ள பூர்வா ராம் பத்ர பூர்வா என்ற இடத்திலிருந்து வந்த திருமண ஊர்வலம் இது. இந்த ஊர்வலத்தில், கவி யாதவ் என்ற டிஜே ஆப்பரேட்டர், தாங்க முடியாத அளவுக்கு சத்தமாகப் பாட்டு வைத்ததாகவும், அதன் சத்தமும் அதிர்வும் அந்தப் பகுதி முழுவதும் நிறைந்திருந்ததாகவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
கால்நடை மருத்துவர் சொன்னது என்ன?
திருமண ஊர்வலம் கோழிப் பண்ணைக்கு அருகே சென்றபோது, அதிகப்படியான சத்தத்தையும் அதிர்வையும் கேட்டு கோழிகள் மிரண்டு போயுள்ளன. திடீரென ஏற்பட்ட பயத்தில் கோழிகள் கூட்டமாகச் சிதறி ஓடியதாகவும், சில நிமிடங்களிலேயே 140 கோழிகள் இறந்து விழுந்ததாகவும் பண்ணையின் உரிமையாளர் சபீர் அலி விளக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தை விசாரித்த தலைமை கால்நடை மருத்துவர் பிரமோத் சர்மா, கோழிகள் மாரடைப்பால் இறந்ததை உறுதிப்படுத்தினார்.
அதிக சத்தமும், மன அழுத்தமும்
அதிக சத்தமும் மன அழுத்தமுமே இதற்குக் காரணம் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, பண்ணை உரிமையாளர் சபீர் அலி போலீஸில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், குட்வார் பகுதியைச் சேர்ந்த டிஜே ஆப்பரேட்டர் கவி யாதவ் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உண்மையிலேயே அதிக சத்தம்தான் மரணத்திற்குக் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணிகள் இதன் பின்னணியில் உள்ளதா என்றும் போலீஸார் தற்போது விசாரித்து வருகின்றனர்.

