அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் மிரண்டு போன ராஜஸ்தான்  தனது மாநில எல்லைகளுக்குள் மற்றவர்கள் எளிதில் நுழைய முடியாதபடி ஒரு வாரத்திற்கு சீல் வைத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அடுத்தடுத்த மாநிலங்களாக தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான்  உள்ளன. ராஜஸ்தானில் 11,245  மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலம் எல்லைகளுக்கு ஒரு வாரம் சீல் வைத்துள்ளது. இதையடுத்து எந்தவொரு நபரும் தடையில்லா சான்றிதழ் இன்றி மாநிலத்துக்கு உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாது என காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு இயக்குநர் ஜெனரல் எம்.எல்.லெதர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர் மட்டுமே பாஸ் வழங்க முடியும். இறப்பு, மருத்துவ தேவைகளுக்காக செல்வது போன்ற முக்கிய காரணங்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து வருகிறது.