உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்தியாவில் அதன் தாக்கம் 60 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும் நாடு முழுவதும் இருக்கும் பள்ளி கல்லூரிகள் மார்ச் 16-ஆம் தேதி முதல் மூடப்பட்டு பொதுத்தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. இதனிடையே கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி மார்ச் 24-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு தற்போது மூன்றாவது கட்டத்தை எட்டியிருக்கிறது. மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் அதன் பிறகு பள்ளிகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஊரடங்கு காலம் முடிந்த பிறகு பள்ளிகளை திறந்து மாணவர்கள் சேர்க்கையை நடத்துவது, வகுப்புகளில் பாடங்களை நடத்துவது குறித்து புதிய வழிகாட்டுதலை மேற்கொள்ள தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுவிற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பல்வேறு ஆய்வுகளை நடத்தி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சில தகவல்களை வழங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. ஊரடங்கிற்கு பிறகு நாடு முழுவதும் பள்ளிகளில் 50 சதவீத மாணவர்களை கொண்டு வகுப்புகளை நடத்தலாம் எனவும் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சுழற்சி முறையில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரு நாளில் பள்ளிக்கு வராத மீதமிருக்கும் மாணவர்களுக்கு ஆன்-லைன் மற்றும் யூடியூப் மூலம் வகுப்புகளை நடத்தலாம் எனவும் தேர்வுகளையும் சமூக இடைவெளியை பின்பற்றி நடத்த பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுதொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து அதன் மீது வருகிற 11-ஆம் தேதி முக்கிய முடிவுகளை எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.