புதுச்சேரியில், பிப்.4 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில், பிப்.4 ஆம் தேதி முதல் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்தது. தினசரி தொற்று பாதிப்பு 2 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி, தொற்று பாதிப்பில் முதன்மை மாநிலமாகவும் வந்தது. இருந்த போதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபடவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் கீழ் பதிவாகி வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் ஊரடங்கில் தளவுகள் அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் வருகின்ற 28 ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளி, கல்லூரிகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியில், பிப்.4 ஆம் தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுகிறது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது வைரஸ் தொற்று குறைந்து வருவதால், பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு பாடங்கள் முடிக்கப்படாமல் இருப்பதால், வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படும். பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு 9 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. அப்படி புகார் வந்தால் அந்தப் பள்ளியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
