Supreme court puts sedition law on hold: பாதிக்கப்பட்டவர்கள் மீதான தேசத் துரோக வழக்கை உடனே ரத்து செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
தேசத் துரோக வழக்கு சட்டப் பிரிவு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. தேசத் துரோக சட்டப் பிரிவை மறு ஆய்வு நடத்தி முடிக்கும் வரை இந்த சட்டத்தின் கீழ் எந்த வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. மேலும் இதை வலியுறுத்தி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக நாட்டில் தேசத் துரோக சட்டப் பிரிவுக்கு எதிராக ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரி எஸ்.ஜி. ஒம்பத்கரே உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் தேசத் துரோக சட்டம் 124-ஏ பிரிவை நீக்க வேண்டும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத்திய, மாநில அரசுகள் இதை தவறாக பயன்படுத்தி வருகின்றன என்று கூறி இருந்தார்.
மனு மீது விசாரணை:
இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மனுவை தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. விசாரணையை அடுத்து தேசத் துரோக சட்டப் பிரிவை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மத்திய அரசு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வரை எந்த வழக்குகளையும் பதிவு செய்யக் கூடாது என கூறி இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இந்த இடைப்பட்ட காலத்தில் தேசத் துரோக சட்டப் பிரிவை பயன்படுத்தாது என நம்புகிறோம்.
தேசத் துரோக வழக்கு ரத்து:
தேசத் துரோக வழக்கு பிரிவை மறுபரிசீலனை செய்யும் வரை அதனை பயன்படுத்துவது சரியான விஷயமாக இருக்காது என நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.
இடைப் பட்ட காலத்தில் இந்த சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் பட்சத்தில், பாதிக்கப்படும் நபர்கள் நீதிமன்றத்தை நாடலாம். நீதிமன்றம் பாதிக்கப்பட்டவர்கள் மீதான தேசத் துரோக வழக்கை உடனே ரத்து செய்ய முடியும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.
