உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 60 குழந்தைகள் இறந்தநிலையில், பல குழந்தைகளுக்கு சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி முஸ்லிம் டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்து ஹீராவாகி இருக்கிறார்.

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்து உள்ளன. இதுதொடர்பாக விசாரணையையும் நடைபெற்று வருகிறது.

மருத்துவமனைக்கு திரவ ஆக்ஸிஜன் வினியோகித்து வந்த தனியார் நிறுவனத்துக்கு மருத்துவமனை நிர்வாகம் சுமார் ரூ.69 லட்சம் வரை பாக்கி வைத்திருப்பதால் கடந்த 4–ந் தேதி முதல் ஆக்சிஜன் வினியோகத்தை அந்த நிறுவனம் நிறுத்தி உள்ளது. 

மருத்துவமனையில் மிகவும் இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்ட போது  குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவர் காபீல் கான் சொந்த செலவில் தனது காரின் மூலம் ஆக்சிஜன் சிலிண்டர்களை விலைக்கு வாங்கி வந்து சிகிச்சை அளித்துள்ளார். இதனால், ஏராளமான குழந்தைகள் உயிர் காப்பாற்றப்பட்டது.

கடந்த 10-ம் தேதி இரவு மருத்துவ கல்லூரியின்  ஆக்ஸிஜன் சப்ளை திடீரென குறைந்து நிற்கும் நிலைக்கு வந்துவிட்டது.  இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் அவசரகால ஆக்ஸிஜன் சிலிண்டரை வைத்து சமாளிக்க முடிவு செய்தனர்.

ஆனால் இடையில்லா ஆக்சிஜன் தேவை என்பதால், குழந்தைகள் மருத்துவர் காபீல் கான் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் வழங்கும் நிறுவனத்திற்கு போன் செய்தார். உடனடியாக, ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளை செய்ய கேட்டுள்ளார். ஆனால், ஏறக்குறைய ரூ.69 லட்சம் நிலுவையில் இருப்பதால், அதை கொடுத்தபின்புதான் சிலிண்டர் சப்ளை செய்ய முடியும் எனத் தெரிவித்துவிட்டனர்.

இதையடுத்து, மருத்துவர் கபீல் கான், தனக்கு உதவியாக இரு பணியாளர்களை அழைத்துக் கொண்டு தன்னுடைய காரில் அவருடைய நண்பர் நடத்தும் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்து ரூ. 10 ஆயிரம் செலவில் மூன்று ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி உடனடியாக மருத்துவமனை திரும்பி உள்ளார். 

 இதற்கிடையே மறுநாள் காலையிலும் தனது காரில் வெளியே சென்று தனக்கு தெரிந்த மருத்துவமனைகளில் ஆக்ஜிஸன் சிலிண்டர்களை பெற கான் முயற்சி செய்து ,12 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை சேகரித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளார்.

தன்னுடைய ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கிவருமாறு தன்னுடைய மருத்துவமனை ஊழியரிடம் கொடுத்து உள்ளார். இதற்காக செய்யப்பட்ட அனைத்து செலவுகளையும் ஏற்று முன்நின்று கடைசி நேரத்தில் போராடி கான் எண்ணற்ற குழந்தைகளின் உயிரை காப்பாற்றியுள்ளார்.

டாக்டர் கபீல் கான் மட்டும் சரியானநேரத்துக்கு சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி குழந்தைகளுக்கு அளித்ததால் ஏராளமான குழந்தைகளின் உயிர் காப்பாற்றப்பட்டது என்று குழந்தைகள் பெற்றோர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.