சவுதி அரேபியாவில் புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட கோரமான பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்தில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் மற்றும் மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகியுள்ளனர்.
சவுதி அரேபியாவில் மெக்கா புனிதப் பயணத்தின்போது ஏற்பட்ட பேருந்து விபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 18 பேரும் பலியானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னொரு குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தில் 18 பேர் மரணம்
முஷீராபாத்தில் உள்ள ராம்நகரைச் சேர்ந்த ஷேக் நசீருதீன் மற்றும் அவரது மனைவி அக்தர் பேகம் ஆகியோர் தங்கள் இரு மகன்களில் ஒருவர் மற்றும் இரண்டு மகள்களுடன் இணைந்து ஹைதராபாத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்குப் புறப்பட்டனர். அவர்களுடன் ஒரு மருமகளும் சென்றிருந்தார். இந்த யாத்திரைக்குத் தயாராகியிருந்த குடும்பத்தினர், இது பற்றிப் பல வாரங்களாகப் பேசியதாகவும், மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றி அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நயீம் கூறுகையில், "பதினெட்டு பேர் இறந்துவிட்டனர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் இப்போது நாம்பள்ளியில் உள்ள ஹஜ் ஹவுஸில் இருக்கிறோம், மேலும் சில குழப்பங்கள் இருந்ததால் கூடுதல் விவரங்களைப் பெற முயற்சிக்கிறோம். இறந்தவர்கள் எனது மனைவிக்குப் நெருங்கிய உறவினர்கள். அவர்களில் ஷேக் நசீருதீன் எனது மனைவியின் தாய்மாமா, அக்தர் பேகம் என் அத்தை. பெண்களும் குழந்தைகளுமாக பலர் ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டனர்" என்று தெரிவித்தார்.
நசீருதீனின் மகன்களில் ஒருவன் மட்டும் ஊரில் தங்கியிருந்ததாகவும் அவரது மனைவி புனித யாத்திரைக்குச் சென்றதாகவும் அவர் கூறுகிறார்.
இன்னொரு குடும்பத்தின் துயரம்
இதேபோன்ற துயரம் மற்றொரு குடும்பத்திற்கும் நிகழ்ந்தது. சபீஹா பேகம், அவரது மகன் இர்ஃபான் அகமது, அவரது மனைவி ஹுமேரா நஸ்னீன் மற்றும் அவர்களது குழந்தைகள் ஹம்தான் அகமது, இஸான் அகமது ஆகியோர் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.
"அவர்கள் உமாரா யாத்திரைக்குப் புறப்படுவதற்குச் சரியாக 10 அல்லது 12 நாட்களுக்கு முன்பு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்," என்று சபீஹாவின் தாய்வழிச் சகோதரரான முகமது அகமது கூறுகிறார். இவர் சந்தோஷ்நகரில் உள்ள ஒவைசி காலனியில் வசிக்கிறார்.
"புனித யாத்திரைக்குச் செல்வது பற்றி எங்களிடம் சொன்னார்கள், அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அது முக்கியமான குடும்ப நிகழ்வு என்பதால் அதைக் கொண்டாட நாங்கள் ஒன்றாக இரவு உணவு உண்டோம். அது நேற்று நடந்தது போல உள்ளது. இறந்தவர்களில் இஸான் மற்றும் ஹம்தான் இருவரும் சின்னஞ்சிறு குழந்தைகள்" என்றும் அவர் வேதனை சொல்கிறார்.
அதிகாரம் இல்லை
தெலுங்கானா மாநில ஹஜ் குழுவின் (TGHC) தலைவர் சையத் குலாம் அஃப்சல் பியாபானி கூறுகையில், இந்தப் புனிதப் யாத்திரைக்கு ஏற்பாடு செய்த தனியார் டூர் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்கிறார். இருப்பினும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.
"இது அவர்களுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை என்பதை நான் புரிந்துகொள்கிறேன், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றும் பியாபானி கூறியுள்ளார்.
