Russia-Ukraine Crisis : எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடையை மேற்கத்திய நாடுகள் விதித்தாலும், இந்தியாவுக்கான எஸ்-ஏவுகணை வழங்குவதில்எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

எங்கள் மீது எந்தவிதமான பொருளாதாரத் தடையை மேற்கத்திய நாடுகள் விதித்தாலும், இந்தியாவுக்கான எஸ்-ஏவுகணை வழங்குவதில்எந்தவிதமான பாதிப்பும் இருக்காது என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் போர் தொடுத்த நாளில் இருந்து ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடுகள், அமெரிக்கா, கனடா, பிரி்ட்டன் என வரிசையாக பல்வேறு தடைகளைவிதித்துள்ளன. 

வான் வெளிகளை மூடுதல், ரஷ்ய வங்கிகள் ஸ்விப்ஃட் வங்கி பணப்பரிமாற்ற சேவையை பயன்படுத்தவிடாமல் தடுத்தல், அமெரிக்க டாலருக்கு எதிராக ரஷ்யாவின் ரூபிளின் வரலாற்று சரிவு, ரஷ்ய மத்திய வங்கியுடன் பரிமாற்றத்துக்கு அமெரிக்காவின் தடை போன்றவை ரஷ்யாவுக்கு எதிர்காலத்தில் பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை உண்டாக்கும்

ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட இந்த பொருளாதார, நிதித்தடைகள் அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சிக்கலாக மாறும் என்பதாலும், ரஷ்யாவை பழிவாங்கவும் பல நிறுவனங்கள் அந்நாட்டை விட்டுவெளியேறும் முடிவையும் எடுத்துள்ளன.

ரஷ்யா மீது அடுக்கடுக்காக பொருளாதாரத் தடையை மேற்கத்திய நாடுகள் விதித்திருப்பதால், இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை வழங்குவதில் ஏதாவது சிக்கல் இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. 

இந்தியா, ரஷ்யா இடையே 500 கோடி டாலர் மதிப்பீட்டில் எஸ்-400 ரக ஏவுகணை வாங்க கடந்த 2018ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அப்போது அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கையையும் மீறி இந்த ஒப்பந்தத்தை ரஷ்யாவுடன் இந்தியா செய்தது. 
இதற்கு இந்தியாவுக்கான ரஷ்யத் தூதர் டெனிஸ் அலிபோவ் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

மேற்கத்திய நாடுகள் எங்கள் மீது எத்தனை பொருளாதாரத் தடைகள் விதித்தாலும் இந்தியாவுக்கு எஸ்-400 ரக ஏவுகணை வழங்குவதில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. இதற்கு 100 சதவீதம் உறுதியளிக்கிறோம். இரு நாடுளுக்கு இடையே இனிமேல் பரிவர்த்தனை அந்தந்த தேசிய கரன்சிகள் மூலம் நடக்கும்.

ஒட்டுமொத்த வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளால் இறுதியாக என்ன விளைகிறது என்பதையும் பார்க்கலாம். இந்த எஸ்-400 ஏவுகணையை சப்ளை செய்யத் தயராகிவிட்டோம். நாங்கள் இந்தியாவுடன் அவர்களின் கரன்சியிலேயே வர்த்தகம் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால்,இதற்கு எந்த அளவு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதைப்பொருத்து வர்த்தகம் முன்னெடுப்பு அமையும். 

சாம்பலில் இருந்துதான் ரஷ்யா எப்போதும் எழுந்துள்ளது. மீண்டும் சாம்பலில் இருந்து எழும்.அதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்களைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம். எங்களின் பொருளாதாரம் வலுவாகநிலையாக இருக்கிறது எத்தனை அழுத்தங்கள் வந்தாலும், கடந்த கால அனுபவங்கள் எங்களை வழிநடத்தும்

இவ்வாறு டெனிஸ் அலிபோவ் தெரிவித்தார்