சமாஜ்வாதிக் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான ராம் கோபால் யாதவ் மீண்டும் நேற்று கட்சியில் சேர்க்கப்பட்டார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் நேற்று வெளியிட்டார்.
இது குறித்து சமாஜ் வாதிக் கட்சியின் தலைவர் முலாயம்சிங் யாதவ் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “ கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட, மூத்த தலைவர் ராம் கோபால் யாதவ்மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் தொடர்ந்து மாநிலங்கள் அவையில் கட்சித் தலைவராகச் செயல்படுவார். கட்சியினஅ தேசிய பொதுச்செயலாளராகவும், தேசிய நாடாளுமன்ற உறுப்பினராகவும் ராம் கோபால் செயல்படுவார்'' எனத் தெரிவித்தார்.
முலாயம்சிங்கின் இளைய சகோதரரான ராம்கோபால் யாதவ், முதல்வர் அகிலேஷ் யாதவின் ஆதரவாளர் ஆவார். சமீபத்தில் முதல்வர் அகிலேஷுக்கும், அவரின் சித்தப்பா சிவபால் யாதவுக்கும் அதிகாரப் போட்டி ஏற்பட்டு, ஆதரவாளர்களை மாறி, மாறி நீக்கியபோது, அகிலேஷ் பக்கம் இருந்தார் ராம்கோபால்.
இருப்பினும், கட்சியில் முலாயம் சிங்குக்கு நெருக்கமாக இருக்கும் சிவபால்சிங், தனது சகோதரர் ராம் கோபால் யாதவ், பாரதியஜனதா கட்சியுடன் சேர்ந்து கொண்டு கட்சியை உடைக்கப் பார்க்கிறார். மூன்று முறை பா.ஜனதா மூத்த தலைவர்களை சந்தித்துள்ளார் என குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து ராம் கோபாலை கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கி கடந்த மாதம் 23-ந்தேதி தலைவர் முலாயம்சிங்உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு பிரச்சினையை மாநிலங்கள் அவையில் நேற்று முன் தினம் சமாஜ் வாதி கட்சி எழுப்பியபோது, ராம் கோபால் யாதவ் தீவிரமாகப் பேசினார். இதையடுத்து, அவர் கட்சியில் மீண்டும் இணைக்கப்பட்டார் என்று கூறப்பட்டநிலையில், அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது.
