மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளம் மீண்டும் உயர போகிறது என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. இது அரசு ஊழியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

7ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு பிரச்சினைகளால் 2020ஆம் ஆண்டில் அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்து உயர்த்தப்பட்டு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மேலும் மகிழ்ச்சி தரும் விதமாக இந்த ஜனவரி மாதத்தில் இன்னொரு உயர்வு வரவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்த முறை அகவிலைப்படி 2 சதவீதம் அல்லது 3 சதவீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தற்போது மத்திய ஊழியர்களுக்கு 31 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது. ஜனவரியில் அகவிலைப்படியில் 2% முதல் 3% வரை அதிகரித்தால், ஊழியர்களுக்கு 33 முதல் 34 சதவிகிதம் வரை அகவிலைப்படி கிடைக்கத் தொடங்கும். அதாவது, மீண்டும் ஒரு முறை ஊழியரின் சம்பளம் அதிகரிக்கும். டிசம்பர் 2021 இறுதிக்குள் மத்திய அரசின் சில துறைகளில் பதவி உயர்வுகள் இருக்கும். இது தவிர, பட்ஜெட் 2022 க்கு முன் ஃபிட்மென்ட் ஃபாக்டர் பற்றிய பேச்சுவார்த்தையும் நடக்கவுள்ளது. அதில் ஒரு முடிவு எடுக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.