Asianet News TamilAsianet News Tamil

பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும்..! சுதந்திர தின வாழ்த்து செய்தியில் சத்குரு கோரிக்கை

நமது பொறுப்பான செயல்கள் மூலம் அடுத்த 26 ஆண்டுகளில் பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
 

sadhgurus message on independence day to indians
Author
Chennai, First Published Aug 14, 2021, 3:22 PM IST

நமது பொறுப்பான செயல்கள் மூலம் அடுத்த 26 ஆண்டுகளில் பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

சுதந்திர தினம் என்பது மிக முக்கியமான நாளாகும். கடந்த 74 ஆண்டுகளில் பொருளாதாரம், தொழில்நுட்பம், விஞ்ஞானம், கலை, விளையாட்டு என பல துறைகளிலும் நாம் பல முன்னேற்ற படிகளை எடுத்துள்ளோம். இருப்பினும், நம் நாட்டில் இன்னும் நிறைய பிரச்சினைகள் தீர்வு காணப்படாமல் உள்ளன.

தற்போது, கொரோனா வைரஸ் என்பது நமக்கான மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்த சவாலை வெற்றிகரமாக கடந்து வர மருத்துவ விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி, முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது, தடுப்பூசி போடுவது போன்ற பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. குடிமக்கள் அனைவரும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து பொறுப்புடன் நடந்து கொண்டால் நாம் இந்த சவாலை விரைவில் கடந்து வர முடியும்.

இதுதவிர, நம் நாட்டில் மண் வளம் குன்றி வருவது மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. நம் உடல் மண்ணில் இருந்து உருவாகியுள்ளது. மண்ணில் வளம் குன்றினால் உடலின் நலமும் குன்றும். ஆகவே, மண்ணை எப்போதும் சத்துமிக்கதாக வைத்து கொள்ள வேண்டியது மிக அவசியம். வளமான மண்ணும் தேவையான நீரும் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும் வகையில் செயல்பட வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும். இந்த 75-வது சுதந்திர தின நாளில் நம் நாட்டை நலமான, வளமான நாடாக உருவாக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.

நம் நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அடுத்த 26 ஆண்டுகளில் பசி இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்க வேண்டும். தேவையற்ற புதிய பிரச்சினைகளை உருவாக்குவதை தவிர்த்துவிட்டு, இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அனைவரும் செயல் புரிய செய்ய வேண்டும்.

அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்களும் ஆசிகளும் என்று சத்குரு தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios