Asianet News TamilAsianet News Tamil

மண் வளமாக இருந்தால்தான் மக்கள் நலமாக இருப்பார்கள்..! மத்திய நீர்சக்தி துறை அமைச்சருடன் சத்குரு கலந்துரையாடல்

”மண்ணில் ஊட்டசத்து இருந்தால்தான், அங்கு வாழும் மக்களும் ஊட்டசத்துமிக்க, துடிப்பான மக்களாக இருப்பார்கள்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்தார்.
 

sadhguru speaks about water management and soil quality with union jal shakti minister gajendra singh shekhawat
Author
Chennai, First Published Jun 8, 2020, 4:43 PM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாண்புமிகு மத்திய நீர்சக்தித் துறை அமைச்சர் திரு.கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களுடன் சத்குரு ’ஆன்லைன்’ வழியாக கலந்துரையாடினார். அதில் சுற்றுச்சூழல், மண்வளம், தண்ணீர் பற்றாக்குறை, கழிவு மேலாண்மை, உணவில் ஊட்டச்சத்தை உறுதி செய்தல், காவிரி கூக்குரல் என பல்வேறு தலைப்புகளில் இருவரும் கலந்துரையாடினர்.

சுற்றுச்சூழல் பற்றிய அக்கறை மற்றும் நம்பிக்கையை தாண்டி மக்கள் உறுதியான செயலில் ஈடுபடும் வாய்ப்பு பற்றிய மத்திய அமைச்சரின் கேள்விக்கு பதிலளிக்கையில், கிராமம் மற்றும் நகரங்களில் மக்கள் மாறுபட்ட சூழலில் வாழ்வதால், அவரவர் சூழலுக்கு ஏற்றபடி ஒவ்வொருவருமே மாற்றத்திற்கான முன்னுதாரண மனிதராக இருக்க முடியும் என்ற சத்குரு, தனிப்பட்ட விருப்பங்களை கடந்த அனைவருமே இணைந்து ஒரு தீர்வாக நிற்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

பல்வேறு பிரச்சினைகளுக்கும் கழிவு மேலாண்மை ஒரு தீர்வாக இருப்பதால், மக்கள் தாம் எவ்வளவு கழிவுகளை உற்பத்தி செய்கிறோம் என்பதிலும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். குறைந்த செலவில் வீட்டிலேயே கழிவு மேலாண்மை மையங்கள் அமைத்து, வெளியேறும் 50 முதல் 70 சதவீத கழிவுநீரை சுத்திகரித்து, அதை நகரைச் சுற்றிலும் செடிகளை வளர்க்க பயன்படுத்த முடியும் என பகிர்ந்து கொண்ட சத்குரு, ஒரு உயிரின் கழிவு இன்னொரு உயிருக்கு உணவாக இருக்கும் இயற்கையின் அம்சத்தை சுட்டிக்காட்டி, சுத்திகரிக்கும் துறை என்பது தனித்து இயங்க வேண்டிய ஒன்று என்பதையும் வலியுறுத்தினார்.

sadhguru speaks about water management and soil quality with union jal shakti minister gajendra singh shekhawat

காவேரி கூக்குரல் இயக்கத்தின் முன்னேற்றம் பற்றிப் பேசுகையில், இந்த ஆண்டில் 1.12 கோடி மரங்கள் நடப்படவுள்ளதாக குறிப்பிட்ட சத்குரு, இவற்றில் கிட்டத்தட்ட 100% மரங்களாக வளர்வதையும் - விவசாயிக்கு பொருளாதார ரீதியில் பயனுள்ளதாக இருப்பதால் இது சாத்தியமாகியுள்ளதையும் குறிப்பிட்டார். கர்நாடக மாநில அரசு விவசாயிகள் மரம் வளர்ப்பதற்கான ஊக்கத்தொகையை ஒரு மரத்திற்கு ரூ.100 லிருந்து ரூ125 ஆக அதிகரித்திருப்பதையும் பகிர்ந்து கொண்டார்.

விவசாயிகள் பழ மரங்களை வளர்க்கும் போது, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளை அது நிவர்த்தி செய்வதையும், கிராமப்புறத்தில் இருந்து பிழைப்பு தேடி வெளியேறும் மக்களுக்கும் இது ஒரு தீர்வாக இருப்பதையும்,‌ குளிர்பதன கிடங்குகள், போக்குவரத்து, விநியோகம் மற்றம் ஏற்றுமதி போன்ற புதிய தொழில் வாய்ப்புகளையும் இது மக்களுக்கு ஏற்படுத்துவதையும் சத்குரு தெளிவுபடுத்தினார்.

அதுமட்டுமில்லாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிற்கு வருகை தந்த யாத்திரிகர்கள், இங்கே பழங்களை அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் மக்களிடம் இருப்பதை பதிவு செய்துள்ளதை நினைவு கூர்ந்த சத்குரு, இந்திய மக்கள் புத்திக் கூர்மையுடன் இருப்பதற்கு நமது உணவில் பழங்களை அதிகளவு எடுத்துக் கொள்வது ஒரு காரணம் என்பதையும் பகிர்ந்து கொண்டார். 

நமாமி கங்கை, ஹர்கர்ஜல், ஆத்மநிர்பார் பாரத் அபியான் திட்டங்களைப் பற்றியும் இருவரும் கலந்துரையாடினார்கள். ஒரு தலைமுறையை சேரந்த மக்களாக, இயற்கை வளம் மிகுந்த மதிப்பான இந்த மண்ணை (பாலைவனமாக்கிடாமல்) பாரத்துக்கொள்ளும் பொறுப்பு நமக்கு இருப்பதை நினைவில் கொள்ள கேட்டுக்கொண்டார் சத்குரு‌‌.
 

Follow Us:
Download App:
  • android
  • ios