கேரளாவில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, நவம்பா் 16 ஆம் தேதி முதல் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கேரள அரசு அறிவித்தது.

 

மேலும் சபரிமலையில் பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருந்தார். முதலமைச்சர் பினராயி விஜயனின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண்கள் பலர் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோரி பேரணி நடத்தினர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து 
தமிழகத்திலும், பேரணி நடத்தப்பட்டது. 

இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை, தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்க தலைவர் சைலஜா விஜயன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் மாதாந்திர பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சுவாமி ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் தரிசனத்துக்கு வர முயன்றனர். 

ஆனால், அவர்களை பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்பினரும் அவர்களைத் தடுத்து திருப்பி அனுப்பினர்.மேலும், செய்தி சேகரிக்க சென்ற பெண் பத்திரிகையாளர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். அப்போது, அங்கு கூடிய கூட்டத்தினரை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த போராட்டங்களால் சபரிமலை சுற்றுவட்டாரமே களவரபூமியாக காட்சியளிக்கிறது. 

இதையடுத்து, 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள பிராமண சங்கம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதி அளித்த உச்சநீதிமன்றத்துக்கு தீர்ப்புக்கு எதிர்த்து ஏற்கனவே மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கேரள பிராமண சங்கம் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்கிறது.