எதிர்ப்புகளை மீறி சபரிமலைக்குச் சென்று திருப்பி  அனுப்பப்பட்ட இஸ்லாமிய பெண் ரெஹானா பாத்திமாவை பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிரந்தரமாக பணி நீக்கம் செய்துள்ளது. 

கேரளாவில் உள்ள ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் நுழையலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, சமூக செயற்பாட்டாளராக அறியப்படும் ரெஹானா பாத்திமா, பத்திரிகையாளர் கவிதா ஜெகல் உள்ளிட்ட சில பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றதால் அவர்களால் கோயிலுக்குள் நுழைய முடியவில்லை. மேலும், அந்நேரம் சபரிமலை கோயில் நடையும் அடைக்கப்பட்டு, இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இதையடுத்து, சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களுக்கு இவர்கள் ஆளானார்கள்.

ரெஹானா பாத்திமா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய பதிவுகளைப் பதிவிட்டதாக வழக்குகள் தொடரப்பட்டன. இதனால், அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் பணியாற்றும் பிஎஸ்என்எல் நிறுவனமும் அவரை தற்காலிகமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டும் சபரிமலைக்கு செல்லப்போவதாகக் கூறி, கொச்சி காவல்துறை துணை ஆணையரிடம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். மேலும், நீதிமன்றத்தின் உத்தரவுடன் வந்தால் மட்டுமே காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளனர். 

கேரள மாநிலத்தின் இஸ்லாமிய ஜமாஅத் அமைப்பும், ரெஹானா பாத்திமா என்ற இஸ்லாமிய பெயரை வைத்துக்கொண்டு ஐயப்பன் கோவிலுக்குள் நுழைய முயன்று, இந்துக்களின் உணர்வையும் அவர்களின் சடங்கு மற்றும் சம்பிரதாயங்களையும் புண்படுத்தியதால், இஸ்லாம் மதத்திலிருந்து நீக்கப்படுகிறார்' என அறிவிப்பை வெளியிட்டது. மேலும், மாநில அரசு இதுதொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. 

இந்நிலையில், தற்போது தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிவந்த பிஎஸ்என்எல் நிறுவனத்திலிருந்து நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தங்களுடைய மதத்தின் உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து வந்த பல்வேறு புகார்களைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.