கேரள மாநிலத்தில் மலைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு கேரளா மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் 41 நாட்கள் நடைபெறும் மண்டல பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, பதினெட்டாம் படியேறி சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள். கேரளா மட்டுமின்றி தமிழகம், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் இந்த மண்டல காலத்தில் சபரிமலையை நோக்கி பக்தர்கள் திரள்வார்கள்.

இந்த ஆண்டிற்கான மண்டல பூஜைகள் கடந்த மாதம் 17ம் தேதி தொடங்கியது. 41 நாட்களிலும் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இறுதி நாளான இன்று முக்கியத்துவம் வாய்ந்த மண்டல பூஜை நடக்கிறது. பகல் 12 மணியளவில் களபாபிஷேகம் நடைபெறுகிறது. அதன்பிறகு இரண்டு நாட்கள் கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மீண்டும் மகர விளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30 ம் தேதி கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது.

கார்த்திகை 1ம் தேத முதல் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் சபரிமலையில் பெண்களும் தரிசனத்திற்கு செல்வதை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனு 7 பேர் கொண்டு அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளது. அது வரையிலும் நீதிமன்ற உத்தரவுப்படி பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பதால் சபரிமலையில் பரபரப்பு ஏற்பட்டு பலத்த பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன. கேரள அரசும் காவல்துறையும் பெண்கள் சபரிமலைக்கு வந்தால் பாதுகாப்பு தர மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.