கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருக்கும் சபரிமலை ஐயப்பன் கோவில் உலகப்பிரசித்தி பெற்றது. வருடம் தொடரும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்து சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்கின்றனர். விஷு, மகர சங்கராந்தி, கார்த்திகை, மார்கழி மாதம் மற்றும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் கோவில் நடை திறக்கப்படும்.

கார்த்திகை மாதம் 1ம் தேதியில் இருந்து சபரிமலையில் மண்டல காலம் தொடங்கும். அதற்காக ஐப்பசி கடைசி நாளில் நடை திறக்கப்படும். அதுமுதல் 41 நாட்களுக்கு சுவாமி ஐயப்பன் பக்தர்களுக்கு காட்சி தருவார். மாலை அணிந்த பக்தர்கள் இருமுடி சுமந்து, காட்டு வழியில் நடந்து, பதினெட்டாம் படி ஏறி சுவாமியை தரிசனம் செய்வார்கள். அதன்படி கடந்த  டிசம்பர் 27 அன்று நடைபெற்ற மண்டல பூஜைக்கு பிறகு கோவில் நடை இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் மலை என்ற அனுமதிக்கப்படவில்லை.

மீண்டும் டிசம்பர் 30 ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை சன்னிதானம் திறக்கப்பட்டது. மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்வான மகர சங்கராந்தி நாளை நடைபெறுகிறது. இந்த பூஜையின் போது சுவாமி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் பந்தள அரண்மையில் இருந்து வழிநடையாக நேற்று எடுத்து செல்லப்பட்டது. நாளை மாலை 3 மணியளவில் பம்பா கணபதி  கோவிலுக்கு வரும் ஆபரண பெட்டிக்கு கோவில் நிர்வாகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்படும்.

தொடர்ந்து சபரிமலை கொண்டு செல்லப்படும் ஆபரண பெட்டி பதினெட்டாம் படி வழியாக சந்நிதானத்திற்குள் கொண்டு செல்லப்படும். அதன் பிறகு ஆபரணங்கள் சுவாமி அய்யப்பன் விக்ரகத்திற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது பொன்னம்பல மேட்டில் அய்யப்பன் ஜோதி வடிவில் காட்சி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.மகர விளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலையில் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது . பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Also read: 10 கார்கள் அடுத்தடுத்து பயங்கர மோதல்..! ஒருவர் பலி..! 15 பேர் படுகாயம்..!