மத்தியப் பிரதேசத்தில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்.ல் இருந்து காந்தி படம் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..

கருப்பு பணத்தை மீட்பதாகக் கூறி பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அறிவித்தது. பழைய ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக முதலில் 2000 ரூபாய் நோட்டுகளும் பின்னர் 500 ரூபாய் தாள்களும் புழக்கத்தில் விடப்பட்டன. 

மிக உயர்ந்த தொழில்நுட்பத்தில் இந்நோட்டுகள் அச்சிடப்பட்டதாக மத்திய அரசு மார் தட்டிய சில நாட்களிலேயே ஒரிஜினல் நோட்டுகள் தோற்றுப் போகும் அளவுக்கு கள்ள நோட்டுகள் பரவின. இது இப்படி இருக்க 500 ரூபாய் தாளில்  ரிசர்வ்  வங்கி என்பதற்கு பதிலாக ரிசோர்வ் வங்கி என்று அச்சிடப்பட்டு அது பொதுமக்களின் கைகளுக்கும் எட்டியது. 

சரி அச்சுப்பிழை என்று இதனை மன்னித்துவிடலாம். ஆனால் தற்போது முதலுக்கே மோசம் வந்துவிட்டது. ஆம் 500 ரூபாய் தாளில் தேசத் தந்தை காந்தி புகைப்படமே விடுபட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம்.ல் இத்தகைய செல்லாத நோட்டுகள் வெளிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.