விடுபட்ட தேர்தல் பத்திரங்கள் விவரம்: ஆர்டிஐ தகவலால் அதிர்ச்சி - இத்தனை கோடி ரூபாய் யாருக்கு சென்றது?
தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதை விட அதிகமான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கி விற்பனை செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ வங்கி கடந்த 12ஆம் தேதி சமர்ப்பித்தது. தொடர்ந்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி புதன்கிழமை தாக்கல் செய்தது. அதில், ‘கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதல் பட்டியலில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது பட்டியலில், அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன.
தேர்தல் பத்திரங்கள்: ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது பெரிய நன்கொடையாளர்!
ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை. இருப்பினும், அதனை தெரிந்து கொள்ள உதவும் தேர்தல் பத்திரங்களின் சீரியல் எண்களை வெளியிட எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் மூலம், ஏப்ரல் 2019 முதல் ஜனவரி 2024 வரை அரசியல் கட்சிகள் மொத்தமாக ரூ.12,769 கோடியை பெற்றுள்ளன. அதிகபட்சமாக ரூ.6060 கோடி நன்கொடையை பாஜக பெற்றுள்ளது. மொத்த தேர்தல் பத்திரங்களில் 47.46 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது.
தேர்தல் பத்திரங்கள் விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளதை விட அதிகமான தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ வங்கி விற்பனை செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது.
அதன்படி, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம், கடந்த ஜனவரி மாதம் 25ஆம் தேதி வரை மொத்தம் 28,030 தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், எஸ்பிஐ வங்கி 22,217 தேர்தல் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் 18,871 தேர்தல் பத்திரங்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளன.
அதேபோல், தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.16,518 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் ரூ.12,769 கோடிக்கான விவரங்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், சுமார் 9,159 தேர்தல் பத்திரங்களும், சுமார் ரூ.4000 கோடி தொகையும் விடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. இத்தனை கோடி ரூபாய் எந்தெந்த அரசியல் கட்சிகளுக்கு சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது.
எஸ்பிஐ அளித்துள்ள கோப்புகளின்படி, தேர்தல் ஆணைய இணையதளத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உள்ள விவரங்கள் மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் தேர்தல் பத்திரங்களை எஸ்பிஐ விற்க ஆரம்பித்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும், 2018ஆம் ஆண்டு மார்ச் முதல் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் வரை உள்ள விவரங்கள் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் யாரிடம் இருந்து எவ்வளவு தொகை பெறப்பட்டுள்ளது? அந்த தொகை எந்த அரசியல் கட்சிகளுக்கு சென்றுள்ளது? என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் தனது எக்ஸ் பக்கத்தில், “நேற்று, பட்டியல் வந்தபோது, 2018ஆம் ஆண்டு முதல் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இணையதளத்தில், 18,871 பத்திரங்கள் மட்டுமே உள்ளன. 3,346 பத்திரங்களின் விவரங்கள் இணையதளத்தில் இல்லை; அவற்றை எஸ்பிஐ வழங்கவில்லை. மோடி அரசு யாரை பாதுகாக்க முயல்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில், “ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏப்ரல் 2019 க்குப் பிறகான விவரங்களை மட்டுமே கொடுத்துள்ளது, ஆனால், அது நன்கொடைப் பத்திரங்களை மார்ச் 2018 முதல் விற்க ஆரம்பித்தது. மார்ச் 2018 முதல் ஏப்ரல் 2019 வரை மொத்தம் 2,500 கோடி ரூபாய்க்கான நன்கொடைப் பத்திரங்களை அது விற்றிருக்கிறது. இந்த நன்கொடைப் பத்திரங்களில் பாஜக மட்டுமே 95% நிதியைப் பெற்றுள்ளது. இந்த 2500 கோடி ரூபாய்க்கான தேர்தல் நன்கொடைப் பத்திரங்களை வாங்கிய கம்பெனிகள் எவை? யாரைக் காப்பாற்றுவதற்காக அந்த விவரங்களை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வெளியிடாமலிருக்கிறது.” என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரெய்டுகளுக்கு பின்னர் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்கள்!
முன்னதாக, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை போன்ற மத்திய விசாரணை அமைப்புகளின் ரெய்டுகளில் சிக்கிய நிறுவனங்கள், தனி நபர்கள் அடுத்த சில நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்துள்ளதும் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.