தேர்தல் பத்திரங்கள்: ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது பெரிய நன்கொடையாளர்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதியளித்த நன்கொடையாளர்களில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடைய நிறுவனம் 3ஆவது இடத்தில் உள்ளது

Electoral bond The third largest donor company has reliance links smp

தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என கூறி, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும், தேர்தல் பத்திரங்கள் நடைமுறைப்படுத்தப்பட்ட 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி முதல் தற்போது வரையில் விற்கப்பட்ட பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அந்த விவரங்களை இணையதளத்தில் பதிவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் அதனை எஸ்பிஐ வங்கி சமர்ப்பிக்கவில்லை.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கைக்கு உள்ளான எஸ்பிஐ வங்கி, தேர்தல் பத்திர விவரங்களை கடந்த 12ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது. அத்துடன், தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் எஸ்பிஐ வங்கி தாக்கல் செய்தது. அதில், “கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் 22,030 பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. எஞ்சிய 187 பத்திரங்களின் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் தொடர்ச்சியாக, தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேற்று வெளியிட்டது. அதில், ரூ. 1 லட்சம், ரூ.10 லட்சம் மற்றும் ரூ.1 கோடி ஆகிய மூன்று மதிப்புள்ள பத்திரங்களை வாங்கிய தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அவற்றை மாற்றிய கட்சிகளின் விவரங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தில் இரண்டு பட்டியல்கள் உள்ளன. முதல் பட்டியலில், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தொகை மதிப்பு மற்றும் தேதிகளுடன் வெளியிடப்பட்டுள்ளன. இரண்டாவது பட்டியலில், அரசியல் கட்சிகளின் பெயர்கள், பத்திரங்களின் மதிப்புகள் மற்றும் அவை பணமாக்கப்பட்ட தேதிகள் உள்ளன. ஆனால், எந்த நிறுவனம் எந்தக் கட்சிக்கு நன்கொடை அளித்தது என்ற விவரங்கள் இடம் பெறவில்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலம், அதிகபட்சமான நிதியை பாஜக பெற்றுள்ளது. மொத்த தேர்தல் பத்திரங்களில் 47.46 சதவீதம் பாஜகவுக்கு சென்றுள்ளது. அதேபோல், அரசியல் கட்சிகளுக்கு நிதி அளித்ததில் தமிழ்நாட்டை சேர்ந்த லாட்டரி அதிபர் மார்டினின் பியூச்சர் கேமிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது, அந்நிறுவனம் ரூ.1,368 கோடி ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ.966 கோடி வழங்கி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அதேசமயம், Qwik Supply Chain என்ற பொதுவெளியில் அவ்வளவாக அறியப்படாத நிறுவனம் ரூ.410 கோடி வழங்கி 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த Qwik Supply Chain நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இந்த நிறுவனத்தின் நிதி தரவுகளை பார்த்தல், அது ரிலையன்ஸ் குழுமத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது.

Qwik Supply Chain நிறுவனம், 2021-22 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.360 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. அதே ஆண்டில், அதன் நிகர லாபம் ரூ.21.72 கோடி மட்டுமே. அதேபோல், 2023-24 நிதியாண்டில், அந்த நிறுவனம் மேலும் ரூ.50 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

இந்தியாவின் லாட்டரி கிங் முதல் அதிக தேர்தல் நன்கொடை வழங்கியது வரை.. யார் இந்த லாட்டரி மார்டின்?

கடந்த 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, அரசியல் கட்சிகளுக்கு ஒரு நிறுவனம் எவ்வளவு நன்கொடை அளிக்கலாம் என்ற வரம்புகளை நீக்குவதாக மத்திய அரசு சட்டங்களைத் திருத்தியது. அதற்கு முன்பு, கடைசி மூன்று நிதியாண்டுகளின் ஒரு நிறுவனத்தின் சராசரி லாபத்தில் 7.5 சதவீதத்தை மட்டுமே நிறுவனங்கள் நன்கொடையாக அளிக்க முடியும் என்றிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

Qwik Supply Chain நிறுவனத்தில், விபுல் பிரன்லால் மேத்தா, ஸ்ரீதர் டிட்டி மற்றும் தபஸ் மித்ரா ஆகிய மூன்று இயக்குநர்கள் உள்ளனர். இதில், தபஸ் மித்ரா வேறு 26 நிறுவனங்களிலும் இயக்குநராக உள்ளார். விபுல் பிரன்லால் மேத்தா வேறு எட்டு நிறுவனங்களில் இயக்குநராக உள்ளார்.

தபஸ் மித்ரா இயக்குநராக உள்ள 26 நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஈரோஸ் புரொடக்ஷன்ஸ் எல்எல்பி போன்ற கூட்டாண்மை நிறுவனங்களும் ஜாம்நகர் கண்ட்லா பைப்லைன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்களும் அடங்கும். இதில், ஜாம்நகர் கண்ட்லா பைப்லைன் கம்பெனி பதிவு செய்யப்பட்டுள்ள அகமதாபாத் முகவரியில், ரிலையன்ஸ் பேஜிங் பிரைவேட் லிமிடெட், ஜாம்நகர் ரத்லாம் பைப்லைன் பிரைவேட் லிமிடெட், ரிலையன்ஸ் டேங்கேஜ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ஆயில் மற்றும் பெட்ரோலியம் பிரைவேட் லிமிடெட் போன்ற பல ரிலையன்ஸ் நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது கவனிக்கத்தக்கது.

ரெல் ஐகான்ஸ் டிரேடர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்தில் விபுல் பிரன்லால் மேத்தா இயக்குநராக உள்ளார். இந்த நிறுவனத்தின் இன்னொரு இயக்குனர் மகேஷ் முங்கேகர் என்பவர் ஆவார். பிற ரிலையன்ஸ் குழும நிறுவனங்களான ரிலையன்ஸ் டெலிகாம் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் ஆகியவற்றிலும் இந்த மகேஷ் முங்கேகர் இயக்குநராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios