ஆர்எஸ்எஸ் என்பது ஜனநாயக அமைப்பாகும், அந்த அமைப்புக்கு அதிகாரத்தை கைப்பற்றுவதில் ஆசையில்லை, ஆட்சியாளர்களை ஆட்டிவைக்கவும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஆவேசமாகப் பேசினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் மாநாடு டெல்லியில் திங்கள் கிழமை தொடங்கியது. இதில் அதன் தலைவர் மோகன் பகவத் , ஆர்எஸ்எஸ் மீது வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேசினார். 

ஆர்எஸ்எஸ் என்பது ஒரு ஜனநாயக அமைப்பு. இங்கு தனிமனிதர்களின் அதிகாரத்துக்கு இடமும் இல்லை, வெளியில் இருந்து பிற அமைப்புகளை இயக்குவதும் இல்லை. அதிகாரத்தை கைப்பற்றவும் ஆசையில்லை.

நாட்டின் பன்முகத்தன்மைக்கு நாம் மதிப்பளிக்கவும், அதை கொண்டாடவும் வேண்டும். சமூகத்தில் பிரச்சினைகள ஏற்படுத்த பன்முகத்தன்மை காரணமாக இருக்கக்கூடாது. ஒற்றுமையான,ஒன்றுபட்ட இந்தியா இருப்பதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கமாகும். இந்துத்துவம் என்பது யாருக்கும் எதிரானதோ, யாரையும் தாழ்த்தும் தத்துவமோ இல்லை. 

மக்கள் மத்தியில் ஆர்எஸ்எஸ் குறித்த தவறான புரிதல்கள் இருக்கின்றன. இங்கு தனிமனித அதிகாரம் இருப்பதாக நினைக்கிறார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளிப்படையான அமைப்பு, தொண்டர்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. தங்களுக்கு அளிக்கப்படும் மதிப்பின் அடிப்படையில் தொண்டர்கள் நடந்து கொள்கிறார்கள். காங்கிரஸ் கட்சி சுதந்திரப் போராட்ட காலத்தில் முக்கியப் பங்காற்றியது. பல நல்ல தலைவர்களை நாட்டுக்கு வழங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.