நாட்டில் நடக்கும் ஊழல்களை தடுக்க ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுத உள்ளதாக கூறினார்.
ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, அமராவதியில் தனது புதிய அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது.
ஊழல்வாதிகளுக்கும், கருப்பு பண முதலைகளுக்கும் அரசியல், புகலிடமாக வருகிறது. அரசியலில் உள்ள சிலர், மக்கள் தங்களுக்கு அளித்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்.
ஊழலை தடுப்பதற்கு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்துக்கட்டுங்கள், மொத்த வங்கி பண பரிமாற்றத்தை ஊக்குவியுங்கள் என்று கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (நேற்று) கடிதம் எழுதுகிறேன்.
ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒழித்துக்கட்டி விட்டாலே, பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம்.
சிறிது நாட்களில் எல்லாவற்றுக்கும் வங்கிக்கணக்கை நாட வேண்டிய நிலை வந்துவிடும். நாம் அந்த கலாச்சாரத்தை கொண்டு வரவேண்டும். முதலில், ஒழுங்குப்படுத்துங்கள், இரண்டாவது, அந்த கலாச்சாரத்தை கொண்டு வாருங்கள். அதன்பின்னர் தீமைகளை அது ஒழித்து விடும்.
எல்லாவற்றையும் கையாள்வதற்கு ஒரு ஸ்மார்ட் போன் போதும். பொருட்களை வாங்க, கொடுக்க, பயணம் செய்ய, பண பரிமாற்றம் செய்ய, வெளிநாட்டில் பணம் செலவு செய்யவும்கூட ஒரு ஸ்மார்ட் போன் போதும்.
கருப்பு பணம், சொத்துக்களை தாமாக முன்வந்து அறிவிக்கும் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இதில் ரூ.65 ஆயிரம் கோடி கணக்கில் வந்திருக்கிறது. ஐதராபாத்திலும், அதன் சுற்றுப்பகுதிகளிலும் மட்டுமே ரூ.13 ஆயிரம் கோடி கணக்கில் காட்டப்பட்டுள்ளது. ஒரு தனிநபர் ரூ.10 ஆயிரம் கோடி கணக்கு காட்டி இருக்கிறார். யார் அவர்? நாம் அதை தெரிந்துக்கொள்ள முடியாது. இவ்வளவு பெரிய தொகையை அறிவிப்பது ஒரு தொழில் அதிபருக்கு சாத்தியமா?
எதிர்காலத்தில், 2 அல்லது 3 அல்லது 5 ஆண்டுகளில், தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் மீண்டும் கருப்பு பணத்தை முறைப்படுத்துவார்கள். நீங்கள் 40 முதல் 45 சதவீதத்தை அபராதமாக செலுத்தினால், கருப்பு பணம் வெள்ளைப்பணமாக மாறிவிடும். இது நல்லதா? யாரும் கேள்வி கேட்க முடியாது.
கட்டாய வங்கி பரிமாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டால், அது பணத்துக்கான தேவையை ஒழித்து விடும். பண ஆசையும் குறைந்து விடும். எல்லாருமே நேர்மையான வழியில் சம்பாதிக்க ஆரம்பித்து விடுவார்கள்.
எதிர்காலத்தில் இந்தியா மட்டும்தான் இரட்டை இலக்க வளர்ச்சிவீதத்தை அடையும். உலகிலேயே மிகப்பெரிய சந்தை, நாம்தான். சீன பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில், உலகம் நம்மை நோக்கி பார்க்கிறது. நாம் தொழில் நுட்பத்தில் வலுவாக இருக்கிறோம். மக்கள் தொகை விகிதாச்சாரம் நன்றாக இருக்கிறது. நல்ல தலைமைத்துவம் உள்ளது. இந்தியா வல்லரசு ஆகும் நிலையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
