2030-ம் ஆண்டு வரை ரயில்வே உள்கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால் தனியார் பங்களிப்பு அவசியம் என மத்திய பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:- ரயில்வே வளர்ச்சிக்கு தனியார் துறையுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால், தனியார் பங்களிப்பு அவசியம். அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்ட ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில், பஸ் என எல்லாவற்றுக்கும் ஒரே அட்டை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். 

நாட்டில் 657 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. மேலும், 350 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்படும். மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். சரக்கு போக்குவரத்தை போல் நீர்வழி போக்குவரத்து மேம்படுத்தப்படும்.

கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை நான்கு மடங்காக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார். மேலும், நீர்வழிப்பாதைகளை உருவாக்குவதன் மூலம், சாலை போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என தெரிவித்தார்.