டெல்லி அரசு, முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளை முன்னிட்டு 'அடல் உணவகம்' திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்கள் பசியைப் போக்க, வெறும் 5 ரூபாய்க்கு சத்தான மதிய மற்றும் இரவு உணவு 100 இடங்களில் வழங்கப்படுகிறது.
தலைநகர் டெல்லியில் சாதாரண ஹோட்டல்களில் ஒரு வேளை உணவு உண்ண வேண்டுமென்றால் இன்று 500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை செலவாகிறது. இத்தகைய சூழலில், ஏழை எளிய மக்கள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களின் பசியைப் போக்கும் வகையில், வெறும் 5 ரூபாய்க்கு சத்தான மதிய உணவு மற்றும் இரவு உணவை வழங்கும் 'அடல் உணவகம்' (Atal Canteen) திட்டத்தை டெல்லி அரசு இன்று தொடங்கியுள்ளது.
வாஜ்பாய் பிறந்தநாளில் தொடக்கம்
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். "டெல்லியில் இனி யாரும் பசியோடு உறங்கச் செல்லக்கூடாது; கௌரவமான முறையில் ஏழைகளுக்கு உணவு கிடைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்," என முதல்வர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
அடல் உணவகம் – மெனு
பருப்பு, சாதம், சப்பாத்தி, ஒரு காய்கறி பொறியல், ஊறுகாய் ஆகியவை அடங்கிய முழுமையான உணவுத் (Thali) வழங்கப்படும்.
மதிய உணவு காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை விநியோகிக்கப்படும். இரவு உணவு மாலை 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை கிடைக்கும்.
முதற்கட்டமாக ஆர்.கே. புரம், ஜங்புரா, ஷாலிமார் பாக், கிரேட்டர் கைலாஷ், நரேலா உள்ளிட்ட 45 இடங்களில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களில் மீதமுள்ள 55 இடங்கள் உட்பட மொத்தம் 100 உணவகங்கள் பயன்பாட்டுக்கு வரும். ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு வேளைக்கு சுமார் 500 பேர் வரை சாப்பிட முடியும்.
டிஜிட்டல் முறையில் விநியோகம்
இந்தத் திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் சில நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பழைய முறையிலான கூப்பன்களுக்குப் பதிலாக டிஜிட்டல் டோக்கன் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து உணவகங்களும் 'டெல்லி நகர்ப்புற தங்குமிட மேம்பாட்டு வாரியத்தின்' (DUSIB) டிஜிட்டல் தளத்துடன் இணைக்கப்பட்டு, CCTV கேமராக்கள் மூலம் நேரலையாகக் கண்காணிக்கப்படும்.
குறைந்த விலையில் தரமான உணவு வழங்கும் இந்தத் திட்டம், டெல்லி வாழ் உழைக்கும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


