குடும்பத் தலைவிகளுக்கு ரூ.10000: முதல்வர் அசத்தல் அறிவிப்பு!
குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10000 வழங்கப்படும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால், அம்மாநிலத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 25ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் மாதம் 3ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ராஜஸ்தான் மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம், வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் அள்ளி வீசி வருகின்றன. அம்மாநிலத்தில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே இருமுனை போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். கிரஹ லக்ஷ்மி உத்தரவாதத் திட்டத்தின் கீழ், அந்தத் தொகை ஒவ்வொரு ஆண்டும் குடும்பத் தலைவிகளின் கணக்கில் இரண்டு அல்லது மூன்று தவணைகளாக வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
ராஜஸ்தானின் ஜுன்ஜுனு நகரில் நடைபெற்ற கட்சி பேரணியில் பேசிய அசோக் கெலாட், மாநிலத்தில் உள்ள 1.05 கோடி குடும்பங்களுக்கு ரூ.500 என்ற விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இந்த பேரணியின்போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!
காங்கிரஸ் அரசின் வாக்குறுதிகளை விமர்சித்துள்ள பாஜக எம்எல்ஏவும், எதிர்க்கட்சித் தலைவருமான ராஜேந்திர ரத்தோர், “தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிப்புகளைச் வெளியிடுவதால் காங்கிரஸுக்கு எந்தப் பலனும் இல்லை. உண்மையில் பெண்கள் பயன்பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், இந்த அறிவிப்பை முன்பே வெளியிட்டிருக்கலாம்.” என்றார்.