இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வராமல் தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதால் பொதுமுடக்கம் மே 31ம் தேதி கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மத்திய அரசு சார்பில் சில பொதுவான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதைத்தவிர தேவையான தளர்வுகளை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, மாநில அரசுகளே தளர்வுகள் குறித்த முடிவை எடுக்கின்றன. தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் நேற்றே அறிவிக்கப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் அதற்கான அறிவிப்பை முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று அறிவித்துள்ளார். 

அதன்படி, தெலுங்கானாவில் அனைவருமே மாஸ்க் அணிய வேண்டும் எனவும் உத்தரவை மீறி மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் எனவும் சந்திரசேகர் ராவ் எச்சரித்துள்ளார். 

மேலும், ஹைதராபாத்தில் மட்டும் ஆட்டோ, டாக்ஸி இயங்கலாம். ஆட்டோவில் அதிகபட்சமாக 2 பேரும் டாக்ஸியில் 3 பேரும் மட்டுமே பயணிக்க வேண்டும். நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர தெலுங்கானாவின் மற்ற பகுதிகளில் சலூன் கடைகளை திறக்கலாம். ஆன்லைன் வர்த்தகம் முழுமையாக செயல்படலாம் என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார். 

தெலுங்கானாவில் 1551 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு பாதிப்பு பெரியளவில் இல்லையென்றாலும் முதல்வர் சந்திரசேகர் ராவ் அதிரடியான கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சமரசம் செய்துகொள்வதில்லை.