கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்... மாஸ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்..!
கர்நாடகாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அந்தக் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
எடியூரப்பா பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஏழை, எளிய மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். குடும்பத்துக்காக வேலைக்கு சென்ற தாய், தந்தை, சகோதரர் என முக்கிய குடும்ப உறுப்பினர்கள் இறந்ததால், அந்தக் குடும்பங்கள் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இவர்களின் நிலைமையை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு மூன்றாவது நிவாரண திட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
அதன்படி வறுமை கோட்டுக்கு கீழே உள்ள குடும்ப அட்டைத்தாரர் வீட்டில் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டிய நபர் யாராவது உயிரிழந்திருந்தால், கர்நாடக அரசு அந்தக் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கும். இத்திட்டத்தின் மூலம் 30 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும். இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடகவில்தான் கொரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டம் ஏழை எளிய குடும்பங்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகுக்கும்” என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.