Rotomac Pen Company owner Vikram Kothari arrested
இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன் பெற்று, அதனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்ட ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளரான விக்ரம் கோத்தாரி, இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி கடன் பெற்றுள்ளார். ஆனால், அந்த கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அவர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.485 கோடி, அலகாபாத் வங்கியில் ரூ.352 கோடி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில், விக்ரம் கோத்தாரி கோடிக்கணக்கில் கடன் பெற்றுள்ளார்.

வங்கிகளில் வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டியை திரும்பச் செலுத்தாமல், விக்ரம் கோத்தாரி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்தான், வங்கியில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
இந்த நிலையில், விக்ரம் கோத்தாரிக்கு சொந்தமான உ.பி., கான்பூரில் உள்ள ரோட்டோமேக் பேனா நிறுவனம் கடந்த ஒரு வாரமாக பூட்டி இருந்தது. அதனால், அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும், விக்ரம் கோத்தாரி மீதான விசாரணையையும் சிபிஐ அதிகாரிகள் துரிதப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில், விக்ரம் கோத்தாரிக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கி மோசடி செய்திகள் அடங்குவதற்குற், ரோட்டோமேக் பேனா நிறுவனரின் வங்கி மோசடி தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
