கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்கவும் இல்லை, தங்க வர்த்தகத்தில் ஈடுபடவும் இல்லை என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதாக ஒரு ஊடகத்தில் சில தினங்களுக்கு முன் ஒரு செய்தி வெளியானது. இதனால் ரிசர்வ் வங்கி தங்க விற்பனை மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக மக்கள் கருதினர். ஆனால் அதனை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றையும் பதிவு செய்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி தனது டிவிட்டர் பக்கத்தில், இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்பதாகவும்/ வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்திய ரிசர்வ் வங்கி எந்த தங்கத்தையும் விற்கவில்லை மற்றும் அதன் வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என தெளிவுப்படுத்துகிறது என அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

மற்றொரு பதிவில், மாதந்தோறும் கணக்கிடுவதை வாரந்தோறும் என மாற்றியதால் வாரந்திர புள்ளிவிவர துணை அறிக்கையில் தங்கத்தின் மதிப்பில் ஏற்ற இறக்கம் காணப்படும். சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மற்றும் பரிவர்த்தனை விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் மறுமதிப்பீட்டில் மாற்றம் ஏற்படுகிறது என பதிவு செய்து இருந்தது. கடந்த 25ம் தேதி வாரந்திர புள்ளிவிவர துணை அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு இருந்தது. அதன்படி அக்டோபர் 18ம் தேதி நிலவரப்படி ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு ரூ.1.91 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.