பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பா, தனது 94வது வயதில் மாரடைப்பால் காலமானார். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘பருவம்’, ‘தாண்டு’, ‘வம்ச விருட்சம்’, ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, ‘திரை’, ‘பிளவு’ ஆகியவை தமிழில் வெளியாகியுள்ளன.
பிரபல கன்னட நாவலாசிரியர் எஸ்.எல்.பைரப்பா, மாரடைப்பு காரணமாக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 94.
"இந்தியாவின் புகழ்பெற்ற நாவலாசிரியர், தத்துவஞானி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் மற்றும் சரஸ்வதி சம்மான் விருதுகளை வென்ற திரு. எஸ்.எல். பைரப்பா, இன்று மதியம் 2.38 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஓம் சாந்தி" என்று ராஷ்ட்ரோத்தனா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காலத்தால் அழியாத படைப்புகள்
எஸ்.எல். பைரப்பா, 'வம்சவ்ரிக்ஷா', 'தாத்து', 'பர்வா', 'மந்தாரா' போன்ற பல பிரபலமான நாவல்களை எழுதியுள்ளார். அவரது பெரும்பாலான படைப்புகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழில் ‘பருவம்’, ‘தாண்டு’, ‘வம்ச விருட்சம்’, ‘ஒரு குடும்பம் சிதைகிறது’, ‘திரை’, ‘பிளவு’ ஆகிய நாவல்கள் தமிழில் வெளியாகியுள்ளன.
பத்ம பூஷண், பத்மஸ்ரீ, சரஸ்வதி சம்மான், சாகித்ய அகாடமி விருதுகள் உட்பட பல விருதுகளை அவர் பெற்றுள்ளார்.
அவரது படைப்புகளான 'நாயி-நேரலு', 'மததானா', 'வம்சவ்ரிக்ஷா', 'தப்பலியு நீனாடே மகனே' போன்றவை திரைப்படங்களாகவும், 'கிருஹபங்கா' மற்றும் 'தாத்து' தொலைக்காட்சி தொடர்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி இரங்கல்
“எஸ்.எல். பைரப்பா மறைவின் மூலம், நம் மனசாட்சியைத் தட்டியெழுப்பி, இந்தியாவின் ஆன்மாவில் ஆழமாக ஊடுருவிய ஒரு உயர்ந்த ஆளுமையை நாம் இழந்துள்ளோம். எதற்கும் அஞ்சாத, காலத்தால் அழியாத சிந்தனையாளரான அவர், தனது சிந்தனையைத் தூண்டும் படைப்புகளால் கன்னட இலக்கியத்தை வளப்படுத்தினார். அவரது எழுத்துக்கள் தலைமுறைகளை சிந்திக்கவும், கேள்வி கேட்கவும், சமூகத்துடன் ஆழமாக ஈடுபடவும் தூண்டின.” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
"நமது வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் மீதான அவரது அசைக்க முடியாத ஈடுபாடு வருங்கால சந்ததியினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும். இந்த சோகமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி" என்றும் பிரதமர் தனது இரங்கல் பதிவில் தெரிவித்துள்ளார்.
