அதிகமாகும் வங்கக்கடல் மேற்பரப்பு வெப்பம்... நிறைய புயல்கள் உருவாக வாய்ப்பு.. நிபுணர்கள் எச்சரிக்கை..

வங்காள விரிகுடா கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவதால், புயல்கள் அதிகமாக உருவாகி கடலோர மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Remal Cyclone Increasing Sea surface temperature of the Bay of Bengal... Many cyclones are likely to form... Experts warning Rya

தற்போது வடதமிழகம்-தெற்கு ஆந்திரா பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி 2024ம் ஆண்டின் முதல் புயலாக இந்தியாவில் உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு ரெமல் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வரும் 26-ம் தேதி, கு வங்காளம்,வங்காள தேசம் அருகில் நிலைகொள்ளும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

இந்த ஆண்டு கோடை காலம் தொடங்கியது முதலே நாட்டின் பல மாதங்களில் வெயில் சுட்டெரித்து வந்தது. பல மாவட்டங்களிலும் வெப்ப அலை வீசியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து,கடல் மேற்பரப்பு வெப்பம் வங்காள விரிகுடா பகுதியில் அதிகமாகி வரும் சூழலில்,இப்புயல் வங்காள விரிகுடா பகுதியில் இருந்து,அதிக ஆற்றலை கிரகித்துக் கொள்ளும் எனவும் இதனால் தமிழகத்தின் வெப்பம் உயரும் எனவும் நிபுணர்கள் கூறுகின்றனர். 

வங்காள விரிகுடா பகுதியில் கடலின் மேற்பரப்பு வெப்பம் வழக்கமான அளவை விட,கடந்த 3 வருடங்களாக 1°Cக்கு அதிகமாக உள்ளது. வழக்கமாக,அதன் மேற்பரப்பு சராசரி வெப்பம் 28-30°C ஆக இருக்கும். வழக்கமான அளவை விட வங்காள விரிகுடாவின் மேற்பரப்பு வெப்பம் 1°C அதிகமாக உள்ளது. இலட்சத்தீவுகள்,கேரளா,கர்நாடகா பகுதியில் 3 மடங்கு அதிகமாகவும்,அந்தமான் பகுதியில் 2 மடங்கு அதிகமாகவும் உள்ளது.

கடந்த 2 மாதங்களில்,கடல் வெப்ப அலையின் தாக்கம்,வங்காள விரிகுடாவைக் காட்டிலும்,அரபிக்கடலில் அதிகமாக உள்ளது என கடல் மற்றும் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் (Indian National Centre for Ocean and Information Services(INCOIS) தெரிவித்துள்ளது.

5 நாட்களுக்கு மேலாக, கடல் வெப்ப அலைகள் அதிகம் நிகழ, கடல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள்,வளி மண்டலத்தில் ஏற்படும் சுழற்சி, பருவநிலை மாற்றம் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளது. புவிவெப்பமடைதல் காரணமாக, கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவது புயல்களின் உருவாக்கத்தை துரிதப்படுத்துவதோடு, அதன் காரணமாக,கடலோர மக்களுக்கும்,மீன் வளத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். 

2020ல்,வங்காள விரிகுடாவின் கடல் மேற்பரப்பு வெப்பம் மிக அதிகமாக 34°C என இருந்த போது,"ஆம்பன்" புயல் உருவாகி,பெரும் பாதிப்பை ஏற்படுத்திச் சென்றது என்பது நினைவுகூரத்தக்கது. எனவே கடல் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவதால்,வங்காள விரிகுடா,அரபிக்கடல் பகுதியில்,அதிக புயல்கள் உருவாகும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதன் காரணமாக மீன்களின் இனப்பெருக்க காலத்தில் நிகழும் இடப்பெயர்ச்சி பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடலின் மேற்பரப்பு வெப்பம் அதிகமாவதால் (33°C),ஏப்ரலில் மன்னார் வளைகுடாபகுதியில் 50% பவளப்பாறைகள் அழிவை சந்தித்துள்ளன. இதனால் மீன் வளம் பாதிக்கப்படுவதோடு,கடல் உயிரினங்களின் வளர்ச்சி/இனப்பெருக்கம் பெரிதும் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடல் மேற்பரப்பு வெப்பம்-Sea Surface Temperature-SST-0-0.5°C அதிகமானால் அதை "கண்காணிக்க வேண்டும என்றும்,0.5-1°C அதிகமானால்- விழிப்புடன் தயார் நிலையில்இருக்க வேண்டும் என்றும், 1°C க்கு அதிகமானால் எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும் என்பது விதிமுறைகளாக உள்ளது. எல்நினோ காலங்கள், இந்தியப் பெருங்கடல் இருமுனை (Indian Ocean Dipole) காலங்களில் கடலின் மேற்பரப்பு வெப்பம் உயரும் என ஆய்வுகள் சொல்கின்றன. 

தற்போது, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வருடத்திற்கு 20 நாட்கள் வெப்ப அலைகளாக, பரவலாக பிரிந்து காணப்படுகிறது. ஆனால் 2050ல் புவிவெப்பமடைதல் காரணமாக,இந்தியப் பெருங்கடலின் அனைத்து பகுதிகளிலும்,வருடத்திற்கு 220-250 நாட்கள், கடல் வெப்ப அலைகளாக மாறும் அபாயம் நிறைய உள்ளது என புனே ஐஐடி நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

எனவே புவிவெப்பமடைதலை நாம் கட்டுப்படுத்தாவிடில், கடலின் மேற்பரப்பு வெப்பம் அதிகமாகி, புயல்கள் விரைந்து உருவாவதோடு, மீன் வளம் பாதிக்கப்படுவதுடன் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களும் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. இதை உணர்ந்து தமிழக அரசு விரைந்து, செயல்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் பரந்தூர் விமானநிலைய பகுதியில் 27% பரப்பு ஈரநிலங்கள்(ஈரநிலங்கள் கார்பனை உள்வாங்கி,புவிவெப்பமடைதல் பாதிப்பை குறைக்கும்.) என இருக்க, தமிழக அரசு,அதைத் தெரிந்தே அழிக்க முற்படுவது எப்படி சரியாகும்? தமிழக அரசு தனது முடிவினை மறுபரிசீலனை செய்ய முன்வருமா? என்ற முக்கியமான கேள்வியையும் எழுப்பி உள்ளனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios