மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைத்தது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு விள்ளகம் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராக நேற்று காலை யாரும் எதிர்பாராத விதமாக அதிரடியாக பதவியேற்றுக் கொண்டனர். இதனை எதிர்த்து  சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை ரமணா, அசோஹ் பூஷண், சஞ்ஜீவ் கண்ணா ஆகிய அமர்வு முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. சிவசேனா தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேசியவாத காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி, அரசு தரப்பில் முகுல் ரோஹத்கி ஆகியோர் வாதிட்டனர். 

இந்த வழக்கு விசாரணையில் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றன.  ஆளுநரின் செயல்பாடு ஒருதலைபட்சமாக உள்ளது.  இதுவரை இல்லாத அளவிற்கு அதிகாலையில் அவசர, அவசரமாக பதவியேற்பு நடந்துள்ளது. அவரிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் எதுவும் வெளிப்படையானதாக இல்லை. கர்நாடகாவில் இதுபோல் நடந்த போது 48 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடனடியாக மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். யாரோ ஒருவர் எங்கிருந்தோ கொடுத்த உத்தரவை ஆளுநர் நிறைவேற்றி உள்ளார். இது சட்ட விரோதமானது. நீதிமன்றம் உத்தரவிட்டால் நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார் என  சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். 

இதனையடுத்து, தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஆஜரான அபிஷேக் சிங்வி " ஒரே நாள் இரவில் ஆளுநர் எவ்வாறு முடிவு எடுத்தார்? அஜித் பவாருக்கு ஆதரவான எம்எல்ஏக்கள் எத்தனை பேர் என்பதில் தெளிவான பதில் இல்லை. அஜித்தை நீக்க 54 எம்எல்ஏ.,க்களில் 41 பேர் கையெழுத்திட்டுள்ளனர். அப்படியிருக்கையில், எந்த அடிப்படையில் முதல்வர் பொறுப்பேற்றார். குதிரை பேரம் நடக்காமல் தடுக்க 24 மணி நேரத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தார். 

இதனையடுத்து, ஆளுநர் தரப்பில் ஆஜரான முகில் ரோஹத்கி "யாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. பெரும்பான்மையை அவையில்தான் நீருபிக்க வேண்டும்; ஆனால் ஆளுநரின் முடிவு சட்ட ஆய்வுக்கு உட்பட்டதல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பை முன்கூட்டியே நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? என கேள்வி எழுப்பினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றால் ஆளுநரிடம் கேட்கலாம்; ஞாயிறன்று நீதிமன்றத்தை தொந்தரவு செய்ய வேண்டியதில்லை முகுல் ரோஹத்கி வாதிட்டார். 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இந்த மனு மீதான விசாரணையை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தையும், பட்னாவிஸ் அளித்த ஆதரவு கடிதத்தையும் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மத்திய அரசு, மகாராஷ்டிரா மாநில முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.