Asianet News TamilAsianet News Tamil

ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்க மறுப்பு; பட்டினியால் சிறுமி பலி!

Refusal to provide food at the ration A child is hungry by hunger
Refusal to provide food at the ration A child is hungry by hunger
Author
First Published Oct 17, 2017, 3:32 PM IST


ஜார்கண்ட் மாநிலம் சிம்தேகா மாவட்டத்தில், ஒரு குடும்பத்துக்கு ரேஷன்கார்டை, ஆதார்கார்டுடன் இணைக்காததால்,  உணவுப் பொருட்கள் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. இதனால், பட்டியினால் சாப்பாடு இன்றி 11 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

சிம்தேகா மாவட்டம், கரிமாதி கிராமத்தைச் சேர்ந்தவர் கோலி தேவி. இவரின் மகள் சந்தோஷி தேவி(11வயது). இவர் அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.  பள்ளியில் தனது மதிய உணவை பெற்று சந்தோஷி சாப்பிட்டு வந்தார். ரேஷன் கடை உணவுப்பொருட்களை நம்பியே சந்தோஷி குடும்பம் இருந்துவந்தது. 

இந்நிலையில், கடந்த மாதம் 20ந்தேதி முதல் துர்கா பூஜை பண்டிகைக்காக பள்ளி விடுமுறை விடப்பட்டது. இதனால், சந்தோஷிக்கு பள்ளியில் வழக்கமாக கிடைக்கும் மதிய உணவு கிடைக்கவில்லை. அதனால், வீட்டில் சமைக்கப்படும் உணவையே சந்தோஷி நம்பி இருந்தார். இந்நிலையில், வீட்டில் இருந்த உணவுப்பொருட்களும் சில நாட்களில் தீர்ந்துவிட்டது. 

இதையடுத்து, ரேஷன் கடைகளில் கோலி தேவை பொருட்களை வாங்கச் சென்றபோது, ரேஷன்கார்டுடன், ஆதார் கார்டை இணைக்காமல் இருக்கிறார்கள் என்று கூறி உணவுப்பொருட்கள் வழங்க மறுத்துள்ளனர். இதனால், வீட்டில் உணவு இல்லாமல் 4 நாட்கள் பசியால் வாடிய சந்தோஷி கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். இதையடுத்து கடந்த மாதம் 27 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் 28ந் தேதி அவர் பலியானார். 

இது குறித்து சந்தோஷியின் தாய் கோலி தேவி சமூக ஆர்வலர்களிடம் கூறுகையில், “ரேஷன்கார்டை ஆதார் எண்ணுடன் இணைக்கவில்லை எனக்கூறி எனக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் ரேஷன் பொருட்களை வழங்கவில்லை. இதனால், வீட்டில் உணவு இல்லாமல், எனது மகள் 4 நாட்களாக பட்டினியாக இருந்து இறந்துள்ளார்’’ என தெரிவித்துள்ளார். 

இந்த பட்டினிச் சாவு குறித்து 5 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரான தீரஜ் குமார் கூறுகையில், “ ரேஷன்கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கஜார்கண்ட் அரசு கட்டாயமாக்கியுள்ளது.  கோலிதேவி குடும்பத்தினரிடம் ஆதார் கார்டும், ரேஷன்கார்டும் இருந்தும், அதை இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகளால் அவர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

ஜார்க்கண்டில் உள்ள மலை கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு இருக்காதபோது, அங்கு ஆதார் கார்டு, ரேஷன் கார்டு இணைப்பில் சில தொழில்நுட்ப சிக்கல் ஏற்படும். அதுபோன்ற நேரங்களில் உண்மையான பயணாளிகளுக்கும் ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தார். 

ஆனால்,  ஜல்டேகா மண்டல வளர்ச்சி அதிகாரி சஞ்சய் குமார் கொங்கரி கூறுகையில், “ கோலி தேவி குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், பட்டினியால் கோலிதேவியின் மகள் இறக்கவில்லை. மலேரியா காய்ச்சலால் இறந்தார்’’ எனத் தெரிவித்தார். 

பட்டினியால்தான் சந்தோஷி இறந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்த மாநில உணவு மற்றும் பொதுவினியோக துறை இயக்குநர் சுனில் குமார் சின்ஹா உத்தரவிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios