அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் பாணியில் ஒருவர் ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான புஷ்பா படத்தின் பாணியில் ஒருவர் ரூ.2.50 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை கடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் புஷ்பா திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தில் செஞ்சந்தனம் என்ற பெயரில் விலை உயர்ந்த மரக்கட்டைகளை சட்டவிரோதமாக கடத்தும் நபராக, அல்லு அர்ஜுன் நடித்திருப்பார். செம்மரக்கட்டை என்று பரவலாக அறியப்படும் விலை உயர்ந்த மரக்கட்டையை, படத்திற்காக செஞ்சந்தனம் என்று குறிப்பிட்டு இருப்பார்கள். படத்தில் போலீசின் கண்களில் சிக்காமல் செஞ்சந்தன கட்டைகளை கடத்தும் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன.

தொடக்கத்தில் மரம் வெட்டச் செல்லும் புஷ்பா படிப்படியாக வளர்ந்து செஞ்சந்தன கட்டைகளை கடத்தும் சிண்டிகேட்டின் தலைவராக உயர்ந்து விடுவார். முதல் பாகம் இந்தியா முழுவதும் மெகாஹிட் ஆனதால், அடுத்த பாகம் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், புஷ்பா படத்தை பார்த்து ஆர்வம் அடைந்த ஒருவர், படத்தின் பாணியில் செம்மரக் கட்டைகளை கடத்தியுள்ளார். யாசீன் இனாயத்துல்லா என்ற அந்த நபர், புஷ்பாவைப் போல ஒரு டிரைவர். கர்நாடகா - ஆந்திரா எல்லையில் வெட்டப்பட்ட செம்மரக் கட்டைகளை, அவர் மகாராஷ்டிராவுக்கு கடத்தியுள்ளார்.

புஷ்பா படத்தில் பால் லாரி டேங்கை 2 பாகங்களாக பிரித்து, மேல் பக்கத்தில் பாலையும், அடியில் செஞ்சந்தன கட்டைகளையும் அல்லு அர்ஜுன் கடத்துவார். அதே பாணியில் யாசின் செம்மரக் கட்டைகளை அடியிலும் அதற்கு மேல், காய்கறி பழங்கள் பெட்டிகளையும் வைத்து கட்டைகளை கடத்தியுள்ளார். ஹைலைட்டாக, கொரோனா அத்தியாவசிய பொருட்கள் அவசரம் என்ற ஸ்டிக்கரையும் அவர் லாரியின் முகப்பில் ஒட்டியுள்ளார். இந்த லாரி மகாராஷ்டிராவின் சங்கிலி மாவட்டம் மீரஜ்நகர் காந்தி சவுக் அருகே வந்தபோது, போலீசார் சோதனையிட்டனர். லாரி சந்தேகப்படும்படி இருந்ததால் கூடுதல் சோதனை நடத்திய போலீசார் புஷ்பா யாசினை கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் லாரியில் கொண்டுவரப்பட்ட கட்டைகளின் மதிப்பு ரூ. 2.45 கோடி இருக்கும் என தெரியவந்துள்ளது.