கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Heavy rains in Kerala: நாடு முழுவதும் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. மும்பையில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
டெல்லி, மும்பையில் கனமழை
மேலும் டெல்லி-NCR பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பல இடங்களில் மரங்கள் விழுந்தன, தண்ணீர் தேங்கியது மற்றும் வாகனங்கள் சிக்கிக்கொண்டன. மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் பாதிக்கப்பட்டன. மும்பையில் பெய்த கனமழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பருவமழைக்கு முன்பே பெய்த கனமழை, நகரத்தின் முன்னேற்பாடுகளின் குறைபாடுகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
கேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை
இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பிற பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் மழை மேலும் தீவிரமடையக்கூடும். கேரளாவில் தென் மேற்கு பருவமழை ஆரம்பித்துள்ளதால் திருவனந்தரபுரம் முதல் காசர்கோடு வரை அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
நெல்லை ரயில் மீது மரம் விழுந்தது
எர்ணாகுளம், வயநாடு, கோட்டயம், பாலக்காடு, காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. பல இடங்களில் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் சில இடங்களில் வீடுகளின் கூரைகளும் சரிந்தன. திருச்சூரில் ஜாம் நகரில் இருந்து நெல்லை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மரம் விழுந்தது. நல்லவேளையாக ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்
இதேபோல் திருச்சூர் குருவாயூர் ரயில் பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கோழிகோடு, கண்ணூர் ஆலப்புழா மாவட்டங்களில் ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கரையோரம் உள்ள மக்கள் அப்புறப்படுத்தப்படுகின்றனர். சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்தும் பல இடங்களில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் இருந்து தேனி குமுளி சாலை, தேனி போடி மூணாறு சாலையில் சில இடங்களில் மண் சரிவு ஏற்படுள்ளதால் இந்த பகுதிகளில் பயணத்தை தவிர்க்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
கேரளாவில் இன்று காசர்கோடு, கன்னுர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திரிசூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பட்டுள்ளது.
