அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.  

அசானி புயல் காரணமாக இன்று நடைபெறவிருந்த பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது. 
மேற்கு மத்திய வங்கக்‌ கடலில்‌ உருவான 'அசானி' தீவிர புயலாக உருமாறி, மேற்கு-வடமேற்கு திசையில்‌ நகர்ந்து, ஆந்திர கடற்கரை அருகே வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம்‌ தகவல்‌ தெரிவித்துள்ளது. மேலும்‌, இன்று பிற்பகலுக்குள்‌ காக்கிநாடா-விசாகப்பட்டினம்‌ இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும்‌ என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் தொடர்ந்து, நாளை காலைக்குள்‌ ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்‌, ஆந்திரத்தில்‌ இன்று நடைபெறவிருந்த 10 மற்றும்‌ 12ஆம்‌ வகுப்பிற்கான பொதுத்‌ தேர்வுகள்‌ மே 25ஆம்‌ தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, நாளைமுதல்‌ வழக்கம்போல்‌ தேர்வுகள்‌ நடைபெறும்‌ எனவும்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்ககடலில் உருவான புயல் காரணமாக, நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. நேற்று காலை 9 மணி தொடங்கி அண்ணாநகர், வியாசர்பாடி, சைதாப்பேட்டை, ஆவடி, சேத்துப்பட்டு,ஈக்காட்டுதாங்கல், புரசைவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது. சென்னை தவிர்த்து வேலூர், சேலம்,திருச்சி, விழுப்புரம், திருவாரூர் உட்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் மழை பெய்தது.