கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நாகராஜ் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் வழங்கிய நிலையில் அதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், கர்நாடக அரசியல் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதாதள கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆளும் கூட்டணி மீது அதிருப்தியின் காரணமாக காங்கிரஸை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சார்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 16 எம்.எல்.ஏ.க்கள் திடீரென பதவியை ராஜினாமா செய்தனர். மேலும், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திரும்ப பெற்றனர். 

இந்நிலையில், இவர்களின் ராஜினாமா ஏற்காத நிலையில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். உச்சநீதிமன்றம் வரும் செவ்வாய்கிழமை வரை இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை நிரூபிக்க அரசு தயாராக உள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இதனையடுத்து, தேவையான நடவடிக்கைகளை ஆளும் கூட்டணி மேற்கொண்டு வருகிறது. 

இதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அதிருப்தியில் இருக்கும் மூத்த அமைச்சர் எம்.டி.பி.நாகராஜ் வீட்டுக்கு இன்று அமைச்சர் சிவக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அதனை திரும்ப பெறுமாறு சிவக்குமார் மற்றும் துணை முதல்வர் பரமேஸ்வராவும் வலியுறுத்தினார். இதுபோல பல்வேறு எம்.எல்.ஏ.க்களிடம் திரைமறைவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 

இதனிடையே, கர்நாடகாவில் ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான நாகராஜ் மீண்டும் காங்கிரசுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளதாக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். இந்நிலையில், ஆளும் கூட்டணியின் இந்த முயற்சிகள் எடுத்தாலும் இது வேலைக்கு ஆகாது என்று எடியூரப்பா விமர்சனம் செய்துள்ளார்.