ரியாஸி தீவிரவாத தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்
ஜம்மு காஷ்மீரின் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டினால், நிலை தடுமாறிய ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர். 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அருகில உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று நடந்ததற்கு சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக மாலை 6:15 மணியளவில் நடந்த இந்த தாக்குதலில் சிக்கி உயிரிழந்த 9 பேரில் 7 பேரது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில் 4 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்; 3 பேர் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளானது பேருந்து ஷிவ் கோரி கோயிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோயில் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான, ஓட்டுநர், நடத்துனர் உட்பட ஒன்பது பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை துணை ஆணையர் விஷேஷ் பால் மகாஜன் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் உத்தரப்ப்பிரதேசம், டெல்லி, ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முன்பு அந்த பேருந்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அந்த பேருந்து சென்ற பின்னர், அதனைத்தொடர்ந்து ஒரு ஜீப் செல்வது போன்ற காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்ததாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது எக்ஸ் பகக்த்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய புலனாய்வு முகமை குழு ரியாஸிக்கு விரைந்துள்ளது. இந்தக் குழுவானது நிகழ்விடத்தில் ஆய்வு செய்து தடையங்களை சேகரிக்கும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் 7 பெண்கள்: யார் இவர்கள்?
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் புனிதப் பயணிகள் பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இரண்டாவது நிகழ்வு இதுவாகும். முன்னதாக, கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமர்நாத் யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது, இதன் விளைவாக 7 யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 19 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.