பிரதமர் மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் 7 பெண்கள்: யார் இவர்கள்?
பிரதமர் மோடி 3.0 அமைச்சரவையில் பெண்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளனர்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர் மற்றும் அக்கூட்டணியின் நாடாளுமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி 3ஆவது முறையாக பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடியுடன் 72 பேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். அதில், 7 பேர் பெண்கள் ஆவர். இந்த 7 பேரில் இரண்டு பேர் கேபினட் அந்தஸ்து அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். கடந்த முறையை மொத்தம் 11 பெண்கள் மோடியின் அமைச்சரவையில் இருந்த நிலையில், இந்த முறை 7 பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
நிர்மலா சீதாராமன் மற்றும் அன்னபூர்ணா தேவி ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். மாநிலங்களவை எம்.பி.யான நிர்மலா சீதாராமனுக்கு இதற்கு முன்பு நிதித்துறை, பாதுகாப்புத்துறை போன்ற முக்கிய இலாக்கக்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அதேசமயம், ஜார்கண்ட் மாநிலம் கோடெர்மா மக்களவைத் தொகுதி எம்.பி.யான அன்னபூர்ணா தேவி, இணை அமைச்சராக இருந்து கேபினட் அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கடந்த மோடி 2.0 அரசில் அவர் கல்வி இணையமைச்சராக இருந்துள்ளார்.
அனுப்ரியா படேல், ரக்ஷா கட்சே, சாவித்ரி தாக்கூர், ஷோபா கரந்த்லாஜே மற்றும் நிமுபென் பம்பானியா ஆகியோரும் அமைச்சர்களாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அனுப்ரியா படேல் பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தளத்தின் (சோனேலால்) தலைவர் ஆவார். நரேந்திர மோடியின் முதல் அரசாங்கத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சராக அவர் இருந்தார், மேலும் மோடி 2.0 அரசில் வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கான இணைமைச்சராகவும் இருந்துள்ளார். இந்தத் தேர்தலில் மக்களவையில் அவரது கட்சியின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஒன்றாகக் குறைந்துள்ளது.
முப்பத்தேழு வயதான ரக்ஷா கட்சே மகாராஷ்டிர மாநிலத்தின் மூத்த அரசியல்வாதி ஏக்நாத் கட்சேவின் மருமகள் ஆவார். ரேவர் மக்களவைத் தொகுதியில் இருந்து தொடர்ந்து 3ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள அவர், இதற்கு முன்பு சர்பஞ்சாகவும் ஜிலா பரிஷத் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா: தேதி அறிவித்த தவெக தலைவர் விஜய்!
மோடி 3.0 இல் இடம்பிடித்த மற்றொரு பெண் அமைச்சர் சாவித்ரி தாக்கூர் ஆவார். மத்தியப்பிரதேச மாநிலம் தார் மக்களவைத் தொகுதியில் இருந்து 2ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ள சாவித்ரி தாக்கூர், பஞ்சாயத்து மட்டத்தில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
கர்நாடகாவை சேர்ந்த ஷோபா கரந்த்லாஜே, இதற்கு முன்பு இணையமைச்சராகப் பணியாற்றியவர். இரண்டு முறை எம்.பி.யான இவர், உணவு பதப்படுத்தும் தொழில்கள் மற்றும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் போன்ற துறைகளை இதற்கு முன்பு வகித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ்நகர் மக்களவை தொகுதி எம்.பி.யான நிமுபென் பம்பானியா முன்னாள் ஆசிரியர் ஆவார். ஐம்பத்தேழு வயதான இவர், இதற்கு முன்பு பாவ்நகர் மேயராக இருந்துள்ளார். பாஜகவில் பல்வேறு நிர்வாக பொறுப்புகளையும் இவர் வகித்துள்ளார்.