கர்நாடக மாநிலத்தில் எருமை மாட்டு பந்தயமான கம்பளா போட்டி நடத்த அவசரச்சட்டம் கொண்டு வருவோம் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கம்பளா பந்தயம்
கடலோரப் பகுதிகளான தென் கன்னட மாவட்டங்களில் எருமை மாடுகளை நுகத்தடியில் பூட்டி சேற்றில் ஓடவிடும் ‘கம்பளா’ பந்தயம் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்தது.
தடை
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவை மேற்கோள்காட்டி, `கம்பளா' போட்டியை நடத்தக் கூடாது என்று பீட்டா அமைப்பு மாநில உயர் நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு மனு செய்தது. அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. முகர்ஜி அந்த போட்டிக்கு தடை விதித்து கடந்த நவம்பரில் இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணை
இந்த தடையை நீக்கக் கோரி கம்பளா விளையாட்டுக் குழு அமைப்பினர் செய்த மனு மீதான விசாரணை வரும் 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தைப் போன்று
இந்நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கப்பட்டு இருந்த தடையை நீக்க மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய மாபெரும் போராட்டத்தால், தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி போட்டியை நடத்தியுள்ளது.
போராட்டம்
ஆதலால், தமிழகத்தைப் போன்று தாங்களும் போராட்டத்தில் இறங்கப்போவதாக `கம்பளா' போட்டி அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மங்களூருவில் `கம்பளா' போட்டி அமைப்பினர் கூடி ஆலோசித்து, வரும் 28-ந்தேதி கர்நாடகத்தின் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
அவசரச்சட்டம் கொண்டு வருவோம்
இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா இது குறித்து கூறுகையில், “ சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளை கேட்ட பின், கடற்கரை ஓர மாவட்டங்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா விளையாட்டுப் போட்டி நடத்த அனுமதி அளிக்கப்படும். இந்த போட்டியை நடத்துவதில் எங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இல்லை. இப்போது இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கிறது. விசாரணைக்கு வரும் போது, என்ன நடக்கிறது என்று பார்க்கலாம். தேவைப்பட்டால், அவசரச்சட்டம் கூட கொண்டு வந்து போட்டி நடத்தப்படும்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்ரவரி 6-ந்தேதி தொடங்குகிறது. நாங்கள் என்ன செய்யப்போகிறோம் பொறுத்து இருந்து பாருங்கள். தமிழ்நாடு ,வேறு கர்நாடகம் என்பது வேறு. ஜல்லிக்கட்டு என்பது கம்பளா விளையாட்டில் இருந்து வேறுபட்டது. இதை ஒப்பிடமுடியாது'' என்றார்.
